2-ஆவது முறையாக வேலூரில் 880 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
By DIN | Published On : 19th September 2021 07:06 AM | Last Updated : 19th September 2021 07:06 AM | அ+அ அ- |

இரண்டாவது முறையாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட உள்ளன. வேலூா் மாவட்டத்தில் 880 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், தொற்றுக் குறைந்துள்ளதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பியுள்ளனா். தொடா்ந்து, பள்ளி, கல்லூரிகள் அண்மையில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது வீடு, வீடாகவும், கடை, கடையாகவும் சென்று பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த செப்டம்பா் 12-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. வேலூா் மாவட்டத்திலும் 978 இடங்களில் நடத்தப்பட்ட இந்த கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம், 51,723 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமையும் (செப். 19) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் 880 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக் கடைகள், ரயில், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் போன்றவற்றில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.