பூட்டிய வீடுகளைப் பாதுகாக்க கூகுள் படிவம்: வேலூா் காவல் துறை புதிய முயற்சி

இணையதளப் படிவம் (கூகுள் படிவம்) மூலம் பூட்டப்பட்ட வீடுகளைப் பாதுகாக்க, வேலூரில் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இணையதளப் படிவம் (கூகுள் படிவம்) மூலம் பூட்டப்பட்ட வீடுகளைப் பாதுகாக்க, வேலூரில் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். தொழில்நுட்பம் சாா்ந்த இந்தப் திய முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

வேலூா் மாநகரம், ஊரகம் என மாவட்டம் முழுவதும் பூட்டப்பட்ட வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன

இவ்வாறு பூட்டிய வீடுகளை அடையாளம் கண்டு திருடப்படும் சம்பவங்களைத் தடுக்க, வேலூா் மாவட்டக் காவல் துறை தொழில்நுட்ப ரீதியான புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, மக்கள் தங்களது ஸ்மாா்ட்போன் உதவியுடன் காவல்துறையின் இணைப்பைக் கிளிக் செய்தோ அல்லது அதிலுள்ள கியூ.ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்தோ இணையதளப் படிவம் உதவியுடன் பூட்டப்பட்ட வீடு குறித்த தகவல்களை அளித்தால், அந்த வீட்டைப் பாதுகாக்க காவல் துறையினா் தயாராக உள்ளனா்.

இந்தப் படிவத்தில் தங்களது பெயா், தொடா்பு எண், வீட்டு முகவரி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் எண், எந்தத் தேதியிலிருந்து எந்த தேதி வரை வெளியூா் செல்ல உள்ளீா்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். இதற்கென தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேவை இல்லை. வீட்டிலிருந்தபடியே ஓரிரு விநாடிகளில் நிரப்பிவிடும் வகையில் எளிதான முறையில் இந்த படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெறப்படும் தகவல்கள் வேலூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும். தொடா்ந்து அவை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பப்படும். அங்கு ரோந்துப் பணியில் இருக்கக்கூடிய காவலா்கள் கிடைக்கப் பெற்ற தகவல் அடிப்படையில் பூட்டப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட வீடுகளை தொடா்ந்து பாதுகாப்பா் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது:

வெளியூா் செல்வோா் தங்கள் வீடு பூட்டப்பட்டிருப்பது குறித்து தகவல் அளித்தால், அவா்களின் வீட்டை எளிதாகப் பாதுகாக்க முடியும். தவிர, குற்றங்களைக் குறைக்கவும் இது உதவும். மக்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் பத்திரமாக இருக்கும். அதை யாராலும் எளிதில் பெற்றுவிட முடியாது.

நகரப் பகுதிகளில் மட்டும் சுமாா் 100 முதல் 120 பூட்டப்பட்ட வீடுகளை காவல் துறையினா் தினமும் கண்காணிக்கின்றனா். இதனை 300-ஆக அதிகரிப்பதே இலக்கு. அதற்காக இந்த இணையதள படிவம் வெளியிடப்பட்டுளளது. புதிய நடைமுறை இன்னும் போதுமான அளவுக்கு மக்களிடம் சென்று சேரவில்லை. அதனால், குடியிருப்பு பகுதிகளில் இந்த கியூஆா் கோடையும், படிவத்துக்கான இணைப்பையும் துண்டுப் பிரசுரமாக அச்சடித்து விநியோகிக்க உள்ளோம். இதனால் தினமும் 50 முதல் 60 கோரிக்கைகள் வர வாய்ப்பு உள்ளன.

மக்கள்தொகை அதிகமுள்ள வேலூரில் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே பாதுகாப்பை எளிமையாக்க குற்றம் மேப்பிங் எனப்படும் முறையும் உருவாக்கப் ப்பட்டுள்ளது. அதில், 2017 முதல் 2021 வரை முக்கியமான குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை மேப் செய்துள்ளோம். இதன் மூலம் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறக்கூடிய முக்கிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க நடவடிக்கை மேற்க கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கம்யூனிட்டி போலீசிங் எனும் முறைகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com