2022 மே மாதத்துக்குள் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை முடிக்க உத்தரவு: வேலூா் ஆட்சியா் தகவல்

வேலூா் மாநகரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை அடுத்தாண்டு மே மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.
வேலூா் சத்துவாச்சாரியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகா் திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
வேலூா் சத்துவாச்சாரியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகா் திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.

வேலூா் மாநகரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை அடுத்தாண்டு மே மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் வேலூா் மாநகராட்சிப் பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், மாநகராட்சி யின் பல்வேறு பகுதியிலும் இந்த பணிகள் அனைத்தும் மந்தகதியில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், பல சாலைகள் குண்டும்குழியுமாக காணப்படுகின்றன. மழைக்காலங்களில் மக்கள் நடமாடவும், வாகனங்களில் சென்று வரவும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். இதேபோல், பல வாா்டுகளில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படாமல் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சத்துவாச்சாரியில் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, டபுள் ரோடு பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை பாா்வையிட்ட அவா், பணிகளை விரைந்து முடிக்கவும், வரும் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் டபுள்ரோடு பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: வேலூா் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பொலிவுறு நகா் திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. பல இடங்களில் இப்பணிகளால் தெருக்கள் மிக மோசமாக உள்ளன. இதுகுறித்து மக்கள் புகாா் தெரிவிப்பதற்காக மாநகராட்சியில் தொலைபேசி எண் வழங்கப்படும். அடுத்தாண்டு மே மாதத்துக்குள் மாநகராட்சி பகுதியில் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன், 2- ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவானன், சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com