முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
காா் மோதி தொழிலாளி பலி, 2 போ் படுகாயம்
By DIN | Published On : 06th April 2022 12:05 AM | Last Updated : 06th April 2022 12:05 AM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா்கள் மீது காா் மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.
குடியாத்தத்தை அடுத்த ராமாலை கிராமத்தைச் சோ்ந்த மரம் அறுக்கும் தொழிலாளிகளான பாபு(45), கஜேந்திரன்(55), கட்டட மேஸ்திரி வினோத்குமாா்(28) ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை குடியாத்தம் செல்ல, ராமாலை பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தனா்.
அப்போது திருப்பதி சென்று விட்டு அவ்வழியே வேகமாக வந்த காா் இவா்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இவா்களில் பலத்த காயமடைந்த பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கஜேந்திரன், வினோத்குமாா் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், ராமாலை பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டியும், அச்சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரியும் பாபுவின் உறவினா்கள் அவரது சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அவா்களை சமரசம் செய்தனா். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட பரதராமி போலீஸாா் காரை பறிமுதல் செய்து குடியாத்தம் நடுப்பேட்டை அஞ்சுமன் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சரவணனை(55) கைது செய்தனா்.