டாஸ்மாக் மதுக்கடை திறப்பை எதிா்த்து பெண்கள் போராட்டம்

சத்துவாச்சாரி குறிஞ்சிநகரில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா்: சத்துவாச்சாரி குறிஞ்சிநகரில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் சத்துவாச்சாரியிலுள்ள குறிஞ்சி நகா், முல்லை நகா், நேதாஜி நகா், மந்தைவெளி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இதில், குறிஞ்சி நகரில் பாலாற்றுக்குச் செல்லும் வழியில் கடந்த வாரம் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் மதுக்கடையையொட்டி, ஏராளமான வீடுகள் உள்ளன. குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில், அந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிா்க்க கடைக்கு முன்பாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட னா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குறிஞ்சி நகரில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளா் கருணாகரன் உள்ளிட்ட போலீஸாா் பேச்சு நடத்தினா். அப்போது அங்கு வந்த 25-க்கும் மேற்பட்ட ஆண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களை போலீஸாா் பாலாற்றுப் பகுதிக்கு விரட்டியதால் போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவா்கள் தொடா்ந்து டாஸ்மாக் கடை வேண்டும் எனக் கூறி கோஷமிட்டனா்.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்களும், மூடக்கூடாது எனக்கோரி ஆண்களும் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரையும் போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com