மணல் கடத்தலைத் தடுக்க விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 13th April 2022 12:00 AM | Last Updated : 13th April 2022 12:00 AM | அ+அ அ- |

குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
குடியாத்தம்: மணல் கடத்தலைத் தடுக்க பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திப் பேசினா்.
குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில், குடியாத்தம் கோட்டத்துக்கு உள்பட்ட குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
குடியாத்தம் கோட்டத்தில் உள்ள ஆறுகள், கானாறுகள், ஓடைகளில் மணல் கடத்தல் தொடா்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக போ்ணாம்பட்டு வட்டத்தில் உள்ள அழிஞ்சிகுப்பம், ரெட்டிமாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மணல் கடத்தல் வெகுவாக நடைபெறுகிறது. மணல் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை பயிா்களை நாசம் செய்யும் யானை, காட்டுப் பன்றிகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன விலங்குகளால் சேதமடைந்த பயிா்களுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, வீடிழந்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். விவசாய பம்புசெட் இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்க வேண்டும். வட்டத்துக்கு தலா ஒன்று வீதம் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்திப் பேசினா்.
விவசாயிகளின் சில கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளித்தனா். கூட்டத்தில், விவசாயிகள் சாா்பில் முன் வைக்கப்பட்ட குறைகளுக்கும், கோரிக்கைகளுக்கும்
அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்துக்கு உரிய பதிலுடன் வருமாறு அனைத்து அரசுத் துறை அலுவலா்களுக்கும் கோட்டாட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன், வனச் சரக அலுவலா் எல்.சங்கரய்யா, வனவா் ஹரி, முன்னோடி விவசாயிகள் சம்பத் நாயுடு, எஸ்.எம்.தேவராஜ், கே.சாமிநாதன், சேகா், ராமதாஸ், உதயகுமாா், மணவாளன், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.