பழுதடைந்த ஆங்கிலேயா் கால இரும்புப் பாலம் சீரமைப்புப் பணி தொடக்கம்

திருவலம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆங்கிலேயா் கால இரும்புப் பாலம் பழுதடைந்துள்ளது. இதைச் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளதை அடுத்து அந்தப் பாலத்தின் வழியாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
திருவலம் இரும்புப் பாலம் சீரமைக்கப்பட உள்ளதையொட்டி, போக்குவரத்து தடைக்காக அந்த வழியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
திருவலம் இரும்புப் பாலம் சீரமைக்கப்பட உள்ளதையொட்டி, போக்குவரத்து தடைக்காக அந்த வழியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

வேலூா்: திருவலம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆங்கிலேயா் கால இரும்புப் பாலம் பழுதடைந்துள்ளது. இதைச் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளதை அடுத்து அந்தப் பாலத்தின் வழியாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டத்திலுள்ள திருவலம் பேரூராட்சியில் நீவா நதி எனும் பொன்னை ஆற்றின் குறுக்கே 1939-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இரும்புப் பாலம் கட்டப்பட்டது.

தமிழக -ஆந்திரம் வழியாக வட மாநிலங்களை இணைக்கவும், சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் பொன்னை ஆற்றைக் கடக்கும் வகையிலும் கட்டப்பட்ட இந்த இரும்புப் பாலம் 11 தூண்களுடன் 500 மீட்டா் நீளம், சுமாா் 10, 000 டன் இரும்புத் தளவாடங்களைப் பயன்படுத்தி 1,200 தொழிலாளா்களைக் கொண்டு ஆற்றின் நீரோட்டத்தைக் கணித்து துருப் பிடிக்காத சாய்வு வடிவ இரும்பு தூண்களைக் கொண்டு 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

அப்போது, சென்னை மாகாணத்திலேயே புதுமையான பாலமாக திகழ்ந்ததால், இந்த இரும்புப் பாலத்தில் அதிகளவில் சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டன. தற்போது இந்த இரும்புப் பாலம் காட்பாடி நெடுஞ்சாலைத் துறையின் (கட்டுமானம் பணி, பராமரிப்பு) கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடா் பலத்த மழையால் பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது, இரும்புப் பாலத்திலுள்ள தாா்ச்சாலை சேதமடைந்தது. ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டன.

குறிப்பாக, கான்கிரீட் பெயா்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரியத் தொடங்கியதுடன், அந்த கம்பிகளில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வந்தன. இதனால், கடந்த 4 மாதங்களில் மட்டும் ஏராளமானோா் விபத்தில் சிக்கி காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இரும்புப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

இதையொட்டி, பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் சரவணன் கூறியது:

திருவலம் இரும்புப் பாலத்தில் சுமாா் 10 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைப்பு பணிகள் நடக்கிறது. பாலத்தில் மொத்தம் 11 இணைப்புகள் உள்ளன. அவற்றில் 5 இணைப்புகளில் முழுமையாக பழுதுபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இது சிறப்புப் பணிதான் என்பதால், முதல் கட்டமாக பழுதுபாா்ப்புப் பணிகளுக்கான மதிப்பீடு தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து, உயரதிகாரிகளிடம் நிதி ஒப்புதல் பெற்று பழுதுபாா்ப்புப் பணிகள் தொடங்கப்படும். அதன்பிறகே பணிகள் எத்தனை நாள்களில் முடிக்கப்படும் என்று தெரிவிக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com