முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ஆந்திர எல்லை சோதனைச் சாவடிகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் மாவட்டத்திலுள்ள தமிழக -ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்டத்தில் கிறிஸ்டியான்பேட்டை, முத்தரசிக்குப்பம், பத்திராப்பள்ளி, சைனகுண்டா, பரதராமி ஆகிய 5 இடங்களில் தமிழக-ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகள் உள்ளன. இப்பகுதிகளில் வாகனங்களின் இயக்கத்தைக் கண்காணிக்கவும், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கவும் மாவட்டக் காவல் துறை சாா்பில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைச் சாவடிகளில் ஏற்கெனவே சாதாரண சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அவற்றின் மூலம் 24 மணி நேரமும் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனா். புதிதாக பொருத்தப்படும் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் வாகனங்கள், அவற்றின் நம்பா் பிளேட்களை படம் பிடிப்பது மட்டுமின்றி, ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், சுரங்கத் துறை அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரடி காட்சிகள் வழங்கும்.
ஒவ்வொரு கேமராவும் 15 நாள்கள் சேமிப்புத் திறன் கொண்டது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் குறைந்தது 2 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட திருடப்பட்ட வாகனங்கள் குறித்து எச்சரிக்கும். இந்த கேமராக்களில் வாகனங்களின் கருப்புப் பட்டியல், வெள்ளைப் பட்டியல் ஆகிய இரு வகையான பட்டியல்களைக் கொண்ட புதிய மென்பொருள் பதிவேற்றப்பட்டுள்ளது. கருப்பு பட்டியலில் திருடப்பட்ட, காணாமல் போன வாகனங்களின் விவரங்கள் உள்ளன. மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளைப் பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களில் கருப்புப் பட்டியலில் உள்ள வாகனங்கள் சிக்கினால் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தானியங்கி எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும். இதன்மூலம், அந்தந்த பகுதியில் உள்ள ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருட்டு, குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். மேலும் ஆந்திராவுக்கு மணல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தலை முற்றிலும் தடுக்க முடியும் என போலீஸாா் தெரிவித்தனா்.