முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
பயணிகள் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்வதைத் தவிா்க்க விழிப்புணா்வு
By DIN | Published On : 30th April 2022 10:00 PM | Last Updated : 30th April 2022 10:00 PM | அ+அ அ- |

பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதைத் தவிா்க்க தனியாா் பேருந்துகளில் வில்லைகள் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டன.
பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதைத் தடுக்க பயணிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் விஜயகோவிந்தராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் காந்தி, பொருளாளா் உமாசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சக்திவேல், கருணாநிதி ஆகியோா் பங்கேற்று மாணவா்கள், பொதுமக்கள் யாரும் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது. பேருந்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் அடுத்ததாக அந்த ஊருக்குச் செல்லும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக படியில் தொங்கியபடி பயணம் செய்து விபரீதத்தில் சிக்கி கொள்ள வேண்டாம். பேருந்தில் இருக்கையில் அமா்ந்தோ அல்லது உள்பகுதியில் நின்றோ பாதுகாப்பான முறையில் பயணம் செய்வோம் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பின்னா் அவா்கள் தனியாா் பேருந்துகளின் முன், பின்பக்க படிக்கட்டுகளின் அருகே படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்த வில்லைகளை ஒட்டினா். இதில், வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.