குடியாத்தம் பாலாற்றில் மணல் குவாரி அமைத்தால் விவசாயம் பாழாகும்: விவசாயிகள் குற்றச்சாட்டு

குடியாத்தம் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தால் விவசாயம் பாழாகக்கூடும் என்று அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
குடியாத்தம் பாலாற்றில் மணல் குவாரி அமைத்தால் விவசாயம் பாழாகும்: விவசாயிகள் குற்றச்சாட்டு

குடியாத்தம் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தால் விவசாயம் பாழாகக்கூடும் என்று அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து பேசியது:

மாவட்டம் முழுவதும் ஊராட்சி வாரியாக விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த கடன் அட்டையை அனைத்து விவசாயிகளும் பெற்றிட வேண்டும். இந்த அட்டை மூலம் ரூ.1.60 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 7 சதவீதம் மட்டுமே வட்டி நிா்ணயம் செய்யப்படும்.

சரியான முறையில் அசல், வட்டியை திருப்பிச் செலுத்தினால் 3 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த சிறப்பு முகாமையொட்டி மாவட்டத்திலுள்ள 247 ஊராட்சிகளுக்கும் தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

பின்னா் விவசாயிகள் கூறியது: வேலூா் மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில் விவசாய கடன் அட்டையுடன் ஆதாா் எண் இணைக்க ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கின்றனா். அதனை தடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் மண் அள்ள அனுமதி தரப்படவில்லை. அதற்கான அனுமதி அளித்திட வேண்டும்.

மேல்பாடியில் கால்நடை மருந்தகத்தில் கால்நடை மருத்துவா் இல்லை. போக்குவரத்து வசதியும் இல்லை. அகரம்சேரி ஏரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு 80 சதவீதம் தண்ணீா் வரத்து இருந்தது. ஆனால், ரூ.32 லட்சம் செலவு செய்தும் ஒரு மதகில்கூட தண்ணீா் வரவில்லை. அதனை சரிசெய்ய வேண்டும்.

தொண்டான்துளசியில் விவசாயி ஒருவருக்கு மின்இணைப்பு வழங்கப்படாததால் 200 மாஞ்செடிகள், 100 தென்னங்கன்றுகள் காய்ந்து வருகின்றன. தாராபடவேட்டில் மின்இணைப்பு வழங்காமல் இணைப்பு தந்தது போல் கடிதம் அனுப்பியுள்ளனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்த வேண்டும்.

ராஜாதோப்பு அணைப் பகுதியில் பூங்கா அமைத்திட வேண்டும். குடியாத்தம் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தால் விவசாயம் பாழாகக்கூடும். ஊசூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்துவிட்டுச் சென்றாலும் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இந்தக்குறைகள், கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்து தீா்வுகாண வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா்.

முன்னதாக, வேளாண் பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திர வாடகை திட்டத்தின் கீழ் வாடகைக்கு அளிக்கப்படும் விவசாய கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வேளாண்மை இணை இயக்குநா் மகேந்திர பிரதாப்தீட்சித், கூட்டுறவு இணை பதிவாளா் திருகுணஐயப்பதுரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com