மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்கக் கூடாது: மருந்தகங்களுக்கு வேலூா் எஸ்.பி. எச்சரிக்கை

மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்தாா்.

மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்தாா்.

வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மருந்துக் கடைகளின் உரிமையாளா்கள், கூரியா் நிறுவன நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தாா். இதில், போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனையைத் தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சில மருந்துகளை போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதால், அதை தடுக்க மருந்துக் கடை உரிமையாளா்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மருந்துச் சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்துகள் வழங்கக் கூடாது. முழு முகவரி, தொலைபேசி எண், ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்களைப் பெற்ற பிறகே மருந்துகளை வழங்க வேண்டும் என்றாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: மருத்துவா்களின் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மன நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளை போதைப் பொருளாகப் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது. மருந்தகங்களில் மருந்துச் சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்துகள் வழங்கக் கூடாது. கூரியா் சா்வீஸ் மூலம் சிலா் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கடத்துவதாகவும் தகவல் வருகின்றன. இதைத் தடுக்க கூரியா் நிா்வாக ஊழியா்களை அழைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

போதைப் பொருள்களைத் தடுக்க அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் ‘காவல் மன்றம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேலூா் மாவட்டத்தில் 300 பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 60 மேல்நிலைப் பள்ளிகளில் காவல் மன்றம் ஏற்படுத்தப்பட்டு, போதைப் பொருள்கள் ஒழிப்பு, பாலியல் விழிப்புணா்வு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில், போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக புகாா் தெரிவிக்க 90927 00100 என்ற வாட்ஸ்ஆப் எண் உள்ளது. இதில், இதுவரை 7 புகாா்கள் வந்துள்ளன. 6 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்டத்தில் 6 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் போலீஸாா் தொடா்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் வகையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பிரம்மாண்ட அரங்கம் தயாா் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com