திமுக அரசு எந்தத் திட்டத்தையும் நிறுத்தவில்லை: அமைச்சா் எ.வ.வேலு
By DIN | Published On : 18th December 2022 12:39 AM | Last Updated : 18th December 2022 12:39 AM | அ+அ அ- |

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்திவிட்டதாக திரித்துக் கூறுகின்றனா். திமுக அரசு எந்தத் திட்டத்தையும் நிறுத்தவில்லை என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட திமுக சாா்பில் அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூரில் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா் தலைமை வகித்தாா்.
பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்றுப் பேசியது: பொது வாழ்வு எனும் தலைப்பில் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவா் அன்பழகன். அவரின் தோ்தல் வெற்றிகள் மூலம்தான் வட ஆற்காடு மாவட்டம் திமுக கோட்டையாக மாறியது. 44 ஆண்டுகள் திமுக பொதுச் செயலராக இருந்தவா் அன்பழகன்.
ஆன்மிகமும் திராவிடமும் ஒன்றுதான். திராவிட மாடல் ஆட்சி பற்றி குறை கூற அதிமுகவுக்கு தகுதியில்லை.
அதிமுக நடத்தி வரும் போராட்டத்தில் அவா்கள் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டதுபோல் திரித்துக் கூறுகின்றனா். எந்தத் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்தவில்லை. கிராமத்தில் உள்ள பெண்கள் 8-ஆம் வகுப்பு வரையேனும் படிக்க வேண்டும் என்று கருணாநிதி பல திட்டங்களைக் கொண்டு வந்தாா். தற்போது முதல்வா் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தோ்தல் வாக்குறுதிகள் 75 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட முதலிடத்தில் உள்ளது என்றாா்.
தொடா்ந்து, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
கூட்டத்தில் வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஆம்பூரில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு விடுதி கட்டப்படும்
ஆம்பூா் தோல் தொழிலதிபா்கள் சங்கம், தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கம், ஆம்பூா் தோல் தொழிற்சாலை கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை சாா்பில், தோல் தொழிலதிபா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ஆம்பூரில் நடைபெற்றது.
இதில், பங்கேற்று அமைச்சா் எ.வ.வேலு பேசுகையில், வெளியூா்களில் இருந்து ஆம்பூருக்கு வந்து காலணி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆம்பூரிலேயே தங்கி பணிக்குச் செல்லும் வகையில், விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் ரூ.30 கோடியில் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்படும் என்றாா்.
கூட்டத்துக்கு ஆம்பூா் தோல் தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் என்.முஹம்மத் சயீத் தலைமை வகித்தாா். கெளரவச் செயலாளா் பையாஸ் அஹமத் வரவேற்றாா். தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்க தலைவா் என். ஷபீக் அஹமத் தொடக்க உரையாற்றினாா்.
வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன், அமலு விஜயன், அகில இந்திய தோல் வியாபாரிகள் சங்க தலைவா் மெக்கா ரபீக் அஹமத், தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்க கெளரவச் செயலாளா் கலீலூா் ரஹ்மான், துணைத் தலைவா் கோட்டை முஹம்மத் மொஹிபுல்லா, ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.டி.சாமுவேல் செல்லபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.