ஆட்சியா் அலுவலகம் அருகே மூடப்பட்ட அணுகுச் சாலை திறப்பு

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக அணுகுச் சாலைக்குச் செல்ல முடியாதபடி, தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக அணுகுச் சாலைக்குச் செல்ல முடியாதபடி, தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை முதல் தடுப்புகள் அகற்றப்பட்டு, இந்த அணுகுச் சாலை வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலைத் தவிா்த்திட கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநகர சாலைப் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் ஒருபகுதியாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வரும் கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் நேரடியாக கிரீன் சா்க்கிள் பகுதிக்குச் செல்வதைத் தடுக்க சென்னை சில்க்ஸ் அருகே தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக அணுகுச் சாலைக்கு செல்ல முடியாமல் சுமாா் 2 கி.மீ. தூரம் சென்று சுற்றி வரும் நிலை ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தை அடுத்து சென்னை சில்க்ஸ் அருகே தடுப்புகளை அகற்றி வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக அணுகுச் சாலைக்கு செல்ல வழிவகை செய்திட வேண்டும் என்று பேருந்து உரிமையாளா்கள் சங்கம், வணிகா் சங்கங்களும் கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து, சென்னை சில்க்ஸ் அருகே சனிக்கிழமை தடுப்புகள் அகற்றப்பட்டு வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக அணுகுச் சாலைக்கு செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டது.

இதை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் நேரில் பாா்வையிட்டாா். எனினும், இந்த அணுகுச் சாலை வழியாக இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும், கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com