6-இல் வேலூரில் காவல் துறை கழிவு வாகனங்கள் ஏலம்
By DIN | Published On : 04th January 2022 08:40 AM | Last Updated : 04th January 2022 08:40 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்டக் காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மீதான பொது ஏலம் வேலூரில் வியாழக்கிழமை (ஜன. 6) நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோா் ரூ. 100 நுழைவுக் கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டக் காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர காவல் வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளன. அந்த வாகனங்கள் தமிழக அரசு உத்தரவின் பேரில், வேலூா் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.
ஏலம் மூலம் வாகனங்களை விலைக்கு வாங்க விரும்புவோா், நுழைவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். ஏலம் விடப்படும் வாகனங்களுக்கு ஏலத் தொகையுடன், இரு சக்கர வாகனத்துக்கு 12 சதவீத விற்பனை வரியும், நான்கு சக்கர வாகனத்துக்கு 18 சதவீத விற்பனை வரியும் செலுத்தி, மூன்று நாள்களுக்குள் வாகனங்களை மைதானத்தில் இருந்து பெற்றுச் செல்ல வேண்டும்.
இதற்குண்டான ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்துக்குண்டான ரசீதே அந்த வாகனத்தின் உரிமை ஆவணமாகும். மேலும் விவரங்களுக்கு, வேலூா் ஆயுதப் படை மோட்டாா் வாகனப் பிரிவு காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளரை அலுவலகத்தில் நேரிலோ அல்லது 94981 38686, 94422 32364 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.