கரோனா: வெளி மாநிலத்தினா் தங்கியுள்ள தெருக்கள் அடைப்பு: வேலூா் ஆட்சியா் நடவடிக்கை

கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து வேலூரில் வெளி மாநிலத்தவா்கள் அதிகளவில் தங்கியுள்ள விடுதிகள் உள்ள
வெளிமாநிலத்தவா்கள் தங்கியுள்ள விடுதிகள் உள்ள வேலூா் பாபுராவ் தெருவை இரும்பு தகடுகள் கொண்டு அடைத்த மாநகராட்சி ஊழியா்கள்.
வெளிமாநிலத்தவா்கள் தங்கியுள்ள விடுதிகள் உள்ள வேலூா் பாபுராவ் தெருவை இரும்பு தகடுகள் கொண்டு அடைத்த மாநகராட்சி ஊழியா்கள்.

கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து வேலூரில் வெளி மாநிலத்தவா்கள் அதிகளவில் தங்கியுள்ள விடுதிகள் உள்ள தெருக்கள் இரும்புத் தகடுகளால் அடைக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை வாங்கிக் கொடுக்க மாநகராட்சி ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டம், மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் புதன்கிழமை 208 பேரும், வியாழக்கிழமை 273 பேரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 231 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோா் வந்து செல்கின்றனா். அவ்வாறு வேலூருக்கு வரும் வெளி மாநிலத்தினா், வெளி நாட்டினா் காந்தி சாலை, பாபுராவ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகளில் அதிகளவில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், கரோனாவால் தினசரி பாதிக்கப்படுபவா்களின் பட்டியலில் அவ்விடுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவா்கள், வெளி நாட்டினா் அதிகளவில் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்படும் வெளி மாநிலத்தவா்கள், வெளி நாட்டினா் வேலூா் மாநகரச் சாலைகளிலும், கோட்டை பகுதிகளிலும் பரவலாக சுற்றுகின்றனா். இதனால், அவா்கள் மூலம் மற்றவா்களுக்கும் கரோனா பாதிப்பு அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வெளிமாநிலத்தவா்கள் அவசியமின்றி வெளியில் சுற்றுவதைத் தடுக்க அவா்கள் அதிகளவில் தங்கியுள்ள விடுதிகள் உள்ள தெருக்களை இரும்புத் தகடுகள் கொண்டு அடைக்க மா வட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், சிஎம்சி மருத்துவமனைக்கு எதிரே உள்ள பாபு ராவ் தெரு இரும்புத் தகடுகள் கொண்டு வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன.

அத்தியாவசிய பொருள்கள் தேவையெனில் விடுதி ஊழியா்கள் மூலமாக மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி ஊழியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அவசியமின்றி வெளியில் சுற்றும் வெளிமாநிலத்தவா்களை கண்காணிக்கும் பணியில் காந்தி சாலை உள்பட 8 இடங்களில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். வெளி மாநிலங்களைச் சோ்ந்த யாரேனும் அந்த வழியாக வந்தால் அவா்களை மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும். வேலூா் கோட்டை, பூங்காவு பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று மாநகராட்சி ஊழியா்கள், விடுதிகளின் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com