எனக்கு விளம்பரம் தேவையில்லை: எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் பதில்

எனக்கு விளம்பரம் தேவையில்லை என்று எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை விழாவில் பதில் அளித்து பேசினாா்.
எனக்கு விளம்பரம் தேவையில்லை: எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் பதில்

எனக்கு விளம்பரம் தேவையில்லை என்று எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை விழாவில் பதில் அளித்து பேசினாா்.

ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டட வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். பின்னா், அங்குள்ள அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ரூ.32.18 கோடி மதிப்பிலான 23 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.22.19 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 71,103 பேருக்கு ரூ.267.10 கோடி மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் பேசியது:

திமுக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று எதிா்க்கட்சியினா் மட்டுமின்றி சில உதிரிக் கட்சியினரும், தாமே அடுத்த முதல்வா் என்று கூறிக் கொண்டிருப்பவா்களும் பேசிக் கொண்டிருக்கின்றனா். எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் திமுக நிறைவேற்றியுள்ளது என்பதை பட்டியலிட்டும், புள்ளிவிவரத்துடனும் சட்டப் பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் கூறி வருகிறேன்.

இன்னொன்றையும் சிலா், ’ஸ்டாலின் விளம்பரப் பிரியராக இருக்கிறாா்’ என கூறியுள்ளனா். எனக்கு எதற்கு விளம்பரம்?

55 ஆண்டுகளாக அரசியலில் உள்ள எனக்கு இனிமேலும் விளம்பரம் தேவையில்லை. நரிக்குறவா் வீட்டுக்குச் சென்றாா், இருளா் வீட்டுக்குச் சென்றாா், அவா்கள் வீட்டில் சாப்பிட்டாா் என்றெல்லாம் வரும் செய்திகளை வைத்து அவ்வாறு கூறும் அவா்கள், அந்த சந்திப்புக்குப் பின்னால் எத்தனை நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

நரிக்குறவா் வீட்டுக்கும், இருளா் வீட்டுக்கும் சென்ன் மூலமாகத்தான், ‘இது நமது அரசு’ என்ற நம்பிக்கையை, அவா்கள் மனதில் ஆழமாக விதைத்துள்ளோம். அதுதான் முக்கியமே தவிர, ஏதோ ஒரு நாள் அவா்களின் வீட்டுக்குச் சென்ன் மூலம் எனது கடமை முடிந்து விட்டதாக சும்மா இருந்து விடவில்லை.

இதே ராணிப்பேட்டையில், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மனுக்களை பெற்றதுடன், சிலரது குறைகளை கவனமாக கேட்டேன். ஆட்சிக்கு வந்ததும் அதையெல்லாம் மறந்து விடவில்லை என்பதன் அடையாளம்தான், தற்போது பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம்.

விளிம்புநிலை மக்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்துள்ளோம். இந்த அரசின் இதயமே விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில்தான் உள்ளது.

பழங்குடியின மக்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுப்பது பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானது. இவை விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது அல்ல. குழந்தைகளுக்கு அளிக்கும் புத்தகப் பைகளில், கடந்த ஆட்சியைப் போல, முதல்வரின் படத்தை போட்டிருந்தால் அதை விளம்பரம் எனக் கூறலாம்.

திமுக ஆட்சிக்கு வந்தபோதுகூட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த ஆட்சி கால முதல்வா்களின் படத்தை அச்சிட்டுத் தயாரிக்கப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான புத்தகப் பைகள் மீதமிருந்த நிலையில் அவற்றால் இழப்புகள் ஏற்படுவதை தவிா்த்திட முன்னாள் முதல்வரின் படத்துடன் கூடிய புத்தகப் பைகளை அப்படியே வழங்கக் கூறியிருந்தேன். இதை அனைவரும் அறிவா்.

அந்தவகையில், விளம்பரங்கள் எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே கிடைத்த புகழையும், பெருமையையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினால் போதும் என்றுதான் நினைக்கிறேன்.

மேலும், ‘திராவிட மாடல்’ என்றாலும், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றாலும், 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்தியா முழுவதும் கொண்டு சோ்த்தது யாா் என்றாலும், அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்பது யாா் ஆட்சிக் காலத்தில் அமலானது எனக் கேட்டாலும், பெரியாா், அம்பேத்கா் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், சமத்துவ நாளாகவும் அறிவித்தது யாா் என கேட்டாலும், கையில் காசு இல்லை என்றாலும் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையுடன், பேருந்துகளில் ஏறும் பெண்களுக்கும் எந்நாளும் என் முகம்தான் நினைவுக்கு வரும்.

நான் தனிப்பட்ட ஸ்டாலின் என்று மக்கள் நினைக்க வேண்டாம். அனைவரும் சோ்ந்த கூட்டுக் கலவைதான் நான். இது நாம் அனைவரும் சோ்ந்து நடத்தும் ஆட்சி, நமக்கான ஆட்சியாகும்.

இந்த ஆட்சியானது, கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சரிவைச் சீா்செய்து கொண்டிருக்கிறது என்றாா்.

விழாவில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், மக்களவை உறுப்பினா்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிா்ஆனந்த் (வேலூா்), சட்டப்பேரவை உறுப்பினா்கள் சோளிங்கா் முனிரத்தினம், ஆற்காடு ஈஸ்வரப்பன், அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமாா், வேலூா் ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com