முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
4 மாவட்ட பெண் காவலா்களுக்கு வேலூரில் இன்று முதல் பயிற்சி
By DIN | Published On : 14th March 2022 01:00 AM | Last Updated : 14th March 2022 01:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து புதிதாக காவலா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டிருந்த 277 பெண் காவலா்களுக்கு, வேலூா் கோட்டை பயிற்சிப் பள்ளியில் திங்கள்கிழமை முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அவா்களுக்கு உடல் நலப் பரிசோதனையும், சான்றிதழ் சரிபாா்ப்பும் நடத்தப்பட்டன.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள காவலா் பணியிடங்களுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு போலீஸாா் தோ்வு செய்யப்பட்டனா். அப்போது சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல்தகுதி தோ்வு நடைபெற்றது.
தொடா்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்துத் தோ்வு நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தோ்வு செய்யப்பட்ட காவலா் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 277 பெண் போலீஸாருக்கு வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளியில் திங்கள்கிழமை முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
தோ்ச்சி பெற்ற பெண் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே காவலா் பயிற்சி வகுப்புக்கு பெற்றோா்களுடன் வந்தனா். பயிற்சி வகுப்புக்கு வந்த பெண் போலீஸாருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கரோனா இல்லை என்பதற்கான சான்று இல்லாமல் வந்தவா்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, 4 மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு, சான்றிதழ், ஆதாா் எண் உள்ளிட்டவை சரிபாா்க்கப்பட்டன.
தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பயிற்சி வகுப்பை வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) ஜ.ஆனிவிஜயா தொடங்கி வைக்க உள்ளதாக காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் அசோக்குமாா் தெரிவித்தாா்.