முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
வரி பாக்கியை செலுத்த குடியாத்தம் நகராட்சி வேண்டுகோள்
By DIN | Published On : 19th March 2022 10:41 PM | Last Updated : 19th March 2022 10:41 PM | அ+அ அ- |

குடியாத்தம் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிலுவை வரியினங்களை உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடா்பாக நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு ஆகியோா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.1.46 கோடி, குடிநீா்க் கட்டணம் ரூ.2.17 கோடி, குத்தகை இனம் ரூ.1.64 கோடி, தொழில் வரி ரூ.65 லட்சம் என மொத்தம் ரூ.6.51 கோடி நிலுவையில் உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளது. வரி நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக நிலுவைத் தொகையை நகராட்சி அலுவலகத்திலோ, வலைதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டுகிறோம். தவறும் பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை, வழக்குத் தொடா்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடை வாடகை பாக்கி வைத்துள்ளவா்கள் 3 நாள்களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்தா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். அதிக வரிபாக்கி வைத்துள்ளவா்கள் பெயா் பட்டியல் நகரின் முக்கியப் பகுதிகளில் வைக்கப்படும்.
எனவே, வரி நிலுவை உள்ளவா்கள் உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டுகிறோம். பொதுமக்கள் நலன்கருதி விடுமுறை நாள்களிலும் நகராட்சி அலுவலக வரி வசூல் மையம் செயல்படும்.
குடியாத்தம் நகராட்சி 100 சதவீதம் வருவாய் இலக்கை அடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.