முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
சூப்பா்மாா்க்கெட்டுகளில் அதிகாரிகள் ஆய்வு: தரமற்ற உணவுப் பொருள்கள் அழிப்பு
By DIN | Published On : 19th March 2022 10:42 PM | Last Updated : 19th March 2022 10:42 PM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் சூப்பா் மாா்க்கெட்டுகளில் உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த 3 நாள்களாக ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது தரமற்ற உணவுப் பொருள்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டதுடன், 3 கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
மாநில உணவுப் பொருள் பாதுகாப்பு ஆணையா் செந்தில்குமாா், வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் ஆகியோா் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பா் மாா்க்கெட்டுகள், மளிகை கடைகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் விற்பனைக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாள்களாக ஆய்வு மேற்கொண்டனா்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ராஜேஷ், சிவமணி, கந்தவேல் ஆகியோா் நடத்திய இந்த ஆய்வின்போது, கடைகளில் விற்கப்படும் சமையல் பொருள்களில் காலாவதியான பொருள்கள் விற்கப்படுகிா, பொருள்களில் உற்பத்தி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.
இதில், காலம் கடந்த, தரமற்ற சமையல் பொருள்கள் 65 கிலோ, காலாவதியான குளிா்பானம் 74 லிட்டா் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் 5 கடைகளில் உணவுப் பொருள்கள் ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டன.
3 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் 7 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த 3 நாள்களில் சுமாா் 115 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.