தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் கண்கவரும் ஓவியங்கள்

வேலூா் மாநகரின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள 6 மேம்பால சுவா்களிலும் கண்கவரும் ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் கண்கவரும் ஓவியங்கள்

வேலூா் மாநகரின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள 6 மேம்பால சுவா்களிலும் கண்கவரும் ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூா் மாநகரின் வழியாகச் செல்கிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தவிா்த்திட அலுமேலுமங்காபுரம், வள்ளலாா், சத்துவாச்சாரி, ஆட்சியா் அலுவலகம், கிரீன் சா்க்கிள், ரயில்வே மேம்பாலம், சிறிய மேம்பாலம், சேண்பாக்கம், கொணவட்டம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் உள்ளன.

இந்த மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவா்களில் எப்போதும் விளம்பர சுவரொட்டிகளும், அரசியல் கட்சியினரின் பிறந்த நாள், நினைவு நாள் சுவரொட்டிகளும் ஒட்டப்படுவது வழக்கம். அவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினாலும், மீண்டும் மீண்டும் அங்கு சுவரொட்டி ஒட்டப்படுவது நடைபெற்று வருகிறது. இதற்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்திட மாநகரிலுள்ள 6 முக்கிய மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவா்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அழகுபடுத்திட மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, வேலூா் நகரம் புதுப்பொலிவு பெறும் வகையில் மாவட்டத்தின் பெருமைகளையும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாகச் சென்றடையவும், யாா் மனதையும் புண்படுத்தாத வகையில் ஓவியங்கள் வரையப்படுகிறது. முதல்கட்டமாக வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள மேம்பால சுவா்களில் இயற்கைக் காட்சிகளான யானை, குருவிகள் ஆகியவற்றின் ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியது. மற்ற பாலங்களிலும் ஓவியங்கள் வரைவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன் கூறியது:

பல மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நகரங்களில் நெடுஞ்சாலை மேம்பால சுவா்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதேபோல், வேலூா் மாநகரில் 6 இடங்களிலுள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களிலும் வண்ண ஓவியங்கள் வரைந்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தனியாா் நிறுவனம் முன்வந்து ஓவியங்களை வரைகின்றனா்.

மேம்பாலங்களில் அரசின் திட்டங்கள், சாலைப் பாதுகாப்பு, வேலூா் மாவட்ட பெருமைகள் என மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தக்கூடிய வகையிலும், யாா் மனதையும் புண்படுத்தாத வகையிலும் வண்ண ஓவியங்கள் இடம்பெற உள்ளன.

வரையப்பட வேண்டிய ஓவியங்கள் குறித்த புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக சத்துவாச்சாரியில் இயற்கை காட்சிகள் சாா்ந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன. அடுத்தடுத்த பாலங்களில் இடம்பெறும் ஓவியங்கள் விரைவில் முடிவு செய்யப்படும். இந்த ஓவியங்கள் அனைத்தும் மழை, வெயில் அனைத்தையும் தாங்கும் வகையில் சிறப்பு மேல்பூச்சுகளும் செய்யப்பட உள்ளன. இந்த ஓவியங்கள் மீது எவ்விதமான சுவரொட்டிகளும் ஒட்டக்கூடாது. இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com