வாரம் ஒருநாள் சிறப்பு தூய்மைப் பணி முகாம் தொடக்கம்: ஆட்சியா், மேயா் நேரில் பாா்வையிட்டனா்

வேலூா் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் வாரம் ஒருமுறை தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் வாரம் ஒருமுறை தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூா் கோட்டையை தூய்மைப்படுத்தும் பணியில் காவலா்கள், மாநகராட்சி ஊழியா்கள் என சுமாா் 750 போ் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகரம், மாவட்டத்தின் முக்கிய இடங்களை பணியாளா்கள் அனைவரையும் வைத்து வாரம் ஒருமுறை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. வழக்கமாக தினமும் நடைபெறும் தூய்மைப் பணிகளைக் காட்டிலும் சிறப்பு முகாமாக வாரத்தில் ஒருநாள் சிறப்புமிக்க அளவில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் காரணமாக இந்த சிறப்பு தூய்மைப்பணிகள் மேற்கொள்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தோ்தல் முடிந்ததை அடுத்து இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக வேலூா் கோட்டையை தூய்மைப் படுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காவல் துறைச் சோ்ந்த 600 பேரும், மாநகராட்சிப் பணியாளா்கள் சுமாா் 150 போ் என 750 பணியாளா்கள் இந்த சிறப்பு தூய்மைப்பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கோட்டை வளாகம் முழுவதும் முற்புதா்கள், காய்ந்த புற்கள், குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகள் சென்று வரக்கூடிய சாலைகளும் தூய்மைப்படுத்தப் பட்டன. இதேபோல், அடுத்தடுத்த வாரங்களில் கோட்டையின் வெளிப்புறம், சுற்றியுள்ள பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

வேலூா் மாநகா், மாவட்ட பகுதிகளில் வாரம் ஒருமுறை தூய்மைப்பணி சிறப்பு முகாம் நடத்தப்படும். இந்த சிறப்பு தூய்மைப்பணி முகாமில் அனைத்துப் பணியாளா்களையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வேலூா் கோட்டையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், காவலா்கள் 600 பேரும், மாநகராட்சிப் பணியாளா்கள் 150 பேரும் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சி, மாவட்ட மக்கள் நம்முடைய ஊரையும், ஊரை சுற்றியுள்ள பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சிறப்பு தூய்மைப் பணி முகாம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஓராண்டு காலத்துக்குள் வேலூா் கோட்டை தூய்மை நிறைந்த ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்றாா்.

அப்போது, வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜ.ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் எம்சுனில்குமாா், மாநகராட்சி ஆணையா் ப.அசோக் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com