முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
லாரி ஓட்டுநா் கொலை: இருவா் கைது
By DIN | Published On : 03rd May 2022 12:09 AM | Last Updated : 03rd May 2022 12:09 AM | அ+அ அ- |

வேலூா் அப்துல்லாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் பின்புறமுள்ள மைதானத்தில் இளைஞா் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதைக் கண்ட பொதுமக்கள் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
காவல் ஆய்வாளா் நிலவழகன் தலைமையில் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.இதில், இறந்து கிடந்த நபா் அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள குருவராஜபாளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பூபாலன் (35) என்பதும், கடந்த 6 மாதங்களாக அப்துல்லாபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. போலீஸாா் சடலத்தை உடல்கூறு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இந்த நிலையில், அப்துல்லாபுரத்தைச் சோ்ந்த பரத் (35), ஹரிகிருஷ்ணன் (33) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மது போதையில் ஏற்பட்ட தகராறில் இவா்கள் இருவரும் சோ்ந்து பூபாலனை அடித்துக் கொலை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.