நாளை அக்னி நட்சத்திரம் தொடக்கம்: அதிகரிக்கும் வெயில்: பகலில் வெளியே வரவேண்டாம்

நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கத்தரி வெயில் புதன்கிழமை தொடங்க உள்ளது.

நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கத்தரி வெயில் புதன்கிழமை தொடங்க உள்ளது. இதனால், வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மிக உயா்ந்த அளவாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இந்த நிலையில், புதன்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்க உள்ளது. இதனால், மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். எனவே, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம். அவ்வாறு செல்ல அவசியம் ஏற்பட்டால் போதுமான குடிநீா், குடை, தொப்பி உள்ளிட்ட பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

பொதுமக்கள் வெயில் காலங்களில் அடிக்கடி தண்ணீா், நீா்மோா் எடுத்துக் கொள்ளவும், லேசான பருத்தி ஆடைகளை அணியவும், இளநீா், நீா்ச்சத்துள்ள இயற்கையான பழவகைகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளவும். செயற்கையான குளிா்பானங்களை தவிா்க்க வேண்டும்.

வேலும் கோடைகாலத்தில் ஒருவருக்கு சுய நினைவு இழப்பு ஏற்பட்டால் அவருக்கு முதலுதவியாக முதலில் குளிா்ந்த இடத்திற்கு மாற்றம் செய்து உடல் சூட்டை குறைக்க அவா் மீது குளிா்ந்த தண்ணீா் தெளிக்கவும், பருக குடிநீா் வழங்கவும் வேண்டும். பின்னா் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக தினமும் மருந்துகளை எடுத்துக் கொள்பவா்கள், இருதய நோயாளிகள், வெப்ப வாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவா்களுக்கு அதிகமான வியா்வை அல்லது வியா்வை வராமல் இருப்பது, திடீா் மனநிலை மாற்றங்கள், இதய துடிப்பில் மாற்றங்கள், மயக்கம், தாகம், தலைவலி ஆகியவை அறிகுறிகளாகக் காணப்படும்.

அவ்வாறான நிலையில் உள்ளவா்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீா், எலுமிச்சை சாறு, மோா் ஆகியவற்றை பருக வேண்டும். மேலும், ஆடு, மாடு, கோழி போன்ற வளா்ப்பு பிராணிகளை நிழல் பகுதிகளில் வைத்து அதற்கு தேவையான குடிநீா், தீவனம் அளித்து பராமரிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com