ரூ.1.60 லட்சம் மின்கட்டணம்: கூலி தொழிலாளி குடும்பம் அதிர்ச்சி

ரூ.1.60 லட்சம் மின்கட்டணம்: கூலி தொழிலாளி குடும்பம் அதிர்ச்சி

வேலூரில் கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.1,60,642 என

வேலூர்: வேலூரில் கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.1,60,642 என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் முத்து மண்டபம் டோபிகானா பகுதியிலுள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியிலுள்ள வீட்டில் வசிப்பவர் எஸ்.ராணி. கட்டட வேலை செய்யும் இவரது கணவர் இறந்துவிட்டார். இவருடன் மகன் நரேஷ், அவரது கர்ப்பிணி மனைவி ராதிகா வசித்து வருகின்றனர்.

இவர்களது வீட்டுக்கான மின்கட்டணமாக 2 மாதத்துக்கு ஒரு முறை ரூ.95 முதல் ரூ.300 வரை மட்டுமே செலுத்தி வந்தனர். இந்நிலையில், இவர்களது வீட்டில் புதன்கிழமை மின்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, 24,570 யூனிட் மின்சாரம் செலவழிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்குரிய மின்கட்டணமாக ரூ.1,60,642 செலுத்த வேண்டும் என்று கணக்கீடு செய்த மின்ஊழியர் கூறியதுடன் அதனை மின்கணக்கீடு அட்டையிலும் எழுதி கொடுத்துச் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராணியின் குடும்பத்தினர் உடனடியாக தோட்டப்பாளையம் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று புகார் தெரிவித்துள்ளனர். அப்போது ரூ.1 லட்சத்துக்கு மேல் மின் கட்டணம் வந்தது குறித்து மனு எழுதி தரும்படி அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், அவர்களும் மனு எழுதி அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை காலை ராணியின் வீட்டுக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கிருந்த மின்மீட்டர் கருவியை பரிசோதித்துவிட்டு புதிய மின்மீட்டர் கருவியை பொருத்திச் சென்றனர். அதேசமயம், அதிகப்படியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ள மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பாக உயரதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள் என கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராணியின் குடும்பத்தினர் கூறியதாவது: எங்கள் வீட்டில் மின்சாதனங்கள் என ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு பிரிட்ஜ், 2 மின்விசிறி, 4 டியூப்லைட் விளக்கு மட்டுமே உள்ளன. பகல் நேரத்தில் வீட்டில் இருக்கும் 3 பேரும் வேலைக்கு சென்று விடுகிறோம். இரவு நேரத்தில் மட்டுமே வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அரசு தந்தபோது நாங்கள் பெரும்பாலும் மின்கட்டணம் கட்டியதே இல்லை. தற்போது ரூ.95 முதல் அதிகபட்சம் ரூ.300 வரை மட்டுமே கட்டணம் செலுத்தி வருகிறோம்.

ஆனால், இந்த மாதம் கணக்கீடு செய்து திடீரென ரூ.1,60, 642 மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளனர். இதுகுறித்து அலுவலகத்தில் புகார் தெரிவித்ததன்பேரில் மின்மீட்டர் மாற்றம் செய்து பொருத்தப்பட்டுள்ளது. எனினும், அதிகப்படியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சரியான மின்கட்டணத்தை நிர்ணயம் செய்திட வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, வேலூர் மண்டல தலைமை மின்பொறியாளர் எம்.அசோகன் கூறியதாவது: மின்மீட்டரில் ஏற்பட்ட பழுதால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். உடனடியாக ஆய்வு செய்து சரியான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com