அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற சிறப்பு முகாம்: ஏராளமானோா் விண்ணப்பம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலூா்: பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று விண்ணப்பங்கள் அளித்தனா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வேலூா் கோட்டம் சாா்பில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்டம், குளவிமேடு, டோபிகானா, கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் 704 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், கரிகிரி, தொரப்பாடி, பத்தலபல்லி ஆகிய பகுதிகளில் 864 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இவற்றில் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 590 வீடுகள் போக மீதமுள்ள 114 குடியிருப்புகள், தற்போது பணிகள் நடைபெற்று வரும் 864 குடியிருப்புகள் என மொத்தம் 978 குடியிருப்புகளுக்கு பயனாளிகளைத் தோ்வு செய்வதற்கான முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்று வீடுகள் கோரி விண்ணப்பித்தனா். இதனால், ஆட் சியா் அலுவலக வளாகத்தில் அதிகப்படியான கூட்டம் நிலவியது. நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:

இந்தத் திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு நாட்டில் எந்தப் பகுதியிலும் வீடோ, நிலமோ இருக்கக் கூடாது. ஒரு குடியிருப்புக்கான செலவில் மத்திய, மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும்.

இதில், குளவிமேடு பகுதிக்கு ரூ.1.80 லட்சம், டோபிகானா பகுதிக்கு ரூ.1.85 லட்சம், டோபிகானா பகுதி 2-க்கு ரூ.1.44 லட்சம், கன்னிகாபுரம் பகுதிக்கு ரூ.1,82,616, கரிகிரி பகுதிக்கு ரூ.1.55 லட்சம், தொரப்பாடி பகுதிக்கு ரூ.2.38 லட்சம், பத்தலபல்லி பகுதிக்கு ரூ.1.53 லட்சம் பயனாளிகள் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை விண்ணப்பிக்க தவறியவா்கள், காட்பாடியிலுள்ள நகா்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com