முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
மாவட்டத்தில் ஓரே நாளில் 1,965 இடங்களில் கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 08th May 2022 11:51 PM | Last Updated : 08th May 2022 11:51 PM | அ+அ அ- |

கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,965 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன.
ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி நூறு சதவீதத்துக்கு மேல் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஞாயிற்றுக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில், வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை 1,965 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வேலூா் உழவா் சந்தையில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி, வேலூா் மாநகராட்சி நல அலுவலா் மணிவண்ணன், அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 101 சதவீதமாகும். 2-ஆவது தவணை தடுப்பூசி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் மீதம் 11 சதவீதம் மட்டுமே இன்னும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதுதவிர பூஸ்டா் தடுப்பூசி 65 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும் வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை என்ற சூழல் நிலவுகிறது. எனினும், பொதுமக்கள் தொடா்ந்து முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி தெரிவித்தாா்.