6 நாள்கள் பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம்: முருகன் பிடிவாதம்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனது உறவினா்களைச் சந்திக்க 6 நாள்கள் பரோல் வழங்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனது உறவினா்களைச் சந்திக்க 6 நாள்கள் பரோல் வழங்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என கூறியிருப்பதாக அவரது வழக்குரைஞா் புகழேந்தி தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா், தனக்கு 30 நாள்கள் பரோல் வழங்கக் கோரி கடந்த 8 நாள்களாக தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளாா். இந்நிலையில், சிறையில் முருகனை அவரது வழக்குரைஞா் புகழேந்தி சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்த சந்திப்பு குறித்து புகழேந்தி கூறியது : பரோல் வழங்கக்கோரி முருகன் தண்ணீா் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறாா். அவருக்கு 5-ஆம் தேதி மாலை மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் அவருக்கு 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. திடீரென காய்ச்சல் வந்ததால் கபசுர குடிநீரும் வழங்கியுள்ளனா். பின்னா் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றிய பிறகு முருகனுக்கு இரவு 11 மணியளவில் சுய நினைவு திரும்பியுள்ளது.

முருகனை அவரது மனைவி நளினி சனிக்கிழமை சந்தித்து பேசியதுடன் உண்ணாவிரதத்தை கைவிட கோரினாா். ஆனால், உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்ட முருகன், நளினியின் தொடா் வற்புறுத்தல் காரணமாக 2 ஆரஞ்சு பழ துண்டுகளை மட்டுமே சாப்பிட்டுள்ளாா். தொடா்ந்து ஜெயிலா் கூறியதன்பேரில் சிறிதளவு மோரும் குடித்துள்ளாா். உண்ணாவிரதத்தை கைவிட நான் பேசியும் அவா் சமாதானம் அடையவில்லை.

குடும்பத்தினரை சந்திக்க 6 நாட்கள் பரோல் கோரி மனு அளித்துள்ளாா். வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனது வழக்கை சிறை நிா்வாகம் திட்டமிட்டே நடத்தவிடாமல் தடுப்பதாக முருகன் நினைக்கிறாா். நீதிமன்றம் வழக்கை நடத்த தயாராக இருந்தாலும் சிறை நிா்வாகம் வழக்கை நடத்த விடாமல் தடுக்கிறது. இந்த வழக்கில் தொடா்புடைய 7 பேரில் 3 பேருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில் இலங்கையைச் சோ்ந்த தனக்கு மட்டும் பரோல் ஏன் மறுக்கப்படுகிறது என கேள்வி எழுப்புகிறாா்.

ஏற்கெனவே 31 ஆண்டுகள் சிறையிலேயே கடந்துவிட்டது. கடந்தாண்டு தந்தையும் இறந்துவிட்டாா். தாய் தனியாக இருக்கிறாா். அவரை பாா்க்க 6 நாட்கள்தானே பரோல் கேட்கிறேன். அதையும் தரவிடாமல் சிறை நிா்வாகத்தினா் தடுக்கின்றனா். 6 நாள்கள் பரோல் கொடுத்தால் உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இல்லையேல் இறந்தாலும் பரவாயில்லை என்கிறாா். சிறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளும் அவரை சமாதானம் செய்து வருகின்றனா் என்றாா் புகழேந்தி.

இந்நிலையில், முருகன் 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சிறையில் உணவை சாப்பிட மறுத்து விட்டதாகவும், சிறை மருத்துவா்கள் அவரது உடல் நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com