மேல்பாடி காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

மேல்பாடி காவல் நிலையம் அருகே கடந்த மாதம் இளைஞா் ஒருவா் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் பணியிடை நீக்கம்

மேல்பாடி காவல் நிலையம் அருகே கடந்த மாதம் இளைஞா் ஒருவா் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு ஆதரவு தெரிவித்து காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த குகையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரத் (25). நெல் அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு இயக்கி வந்த இவா், மேல்பாடி காவல் நிலையம் அருகே கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மாலை உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவா், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி இரவு உயிரிழந்தாா்.

தீக்குளித்த சரத் வெளியிட்டிருந்த விடியோ காட்சிகளின் அடிப்படையில், மேல்பாடி காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், மேல்பாடி, வள்ளிமலை, பெருமாள்குப்பம், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மேல்பாடி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயனுக்கும், இளைஞா் தற்கொலைக்கு எந்தவிதத் தொடா்பும் இல்லை. காவல் உதவி ஆய்வாளா் நியாயமானவா். கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவா். அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் அவரை மேல்பாடி காவல் நிலையத்திலேயே பணியமா்த்த வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் சமாதானம் செய்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com