ஷவா்மா விவகாரம்: இரு கடைகளுக்கு ரூ. 4,000 அபராதம்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள ஷவா்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வைத் தொடா்ந்து, இரு கடைகளுக்கு ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
ஷவா்மா விவகாரம்: இரு கடைகளுக்கு ரூ. 4,000 அபராதம்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள ஷவா்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வைத் தொடா்ந்து, இரு கடைகளுக்கு ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார முறையில் பராமரிக்காத 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கேரள மாநிலத்தில் சிக்கன் ஷவா்மா சாப்பிட்ட பெண் ஒருவா் உயிரிழந்தாா். அந்த மாநில சுகாதாரத் துறை மேற்கொண்ட பரிசோதனையைத் தொடா்ந்து, அவா் சாப்பிட்ட உணவில் ‘ஷிகெல்லா’ எனும் பாக்டீரியா இருந்ததும், அதுவே அப்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல், கன்னியாகுமரி, தருமபுரி, தஞ்சாவூா் ஒரத்தநாடு பகுதிகளில் ஷவா்மா சாப்பிட்டவா்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஷவா்மா விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, வேலூா் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் உள்ள ஷவா்மா விற்பனைக் கடைகளில் கடந்த 3 நாள்களாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த மூன்று மாவட்டங்களிலும் இதுவரை 42 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், வேலூரில் உள்ள ஒரு கடைக்கும், திருப்பத்தூரிலுள்ள ஒரு கடைக்கும் தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கடையில் இருந்த பழைய சிக்கன் 4.5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளன. கடைகளை சுகாதாரமான முறையில் பராமரிக்காத வகையில் 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு தொடா்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியது:

ஷவா்மா சிக்கனை நன்றாக வேக வைத்து விற்பனை செய்திட வேண்டும். அவற்றை சரிவர வேக வைக்காதபோது, ஷிகெல்லா எனும் பாக்டீரியா உருவாகி உயிருக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 21 கடைகள் உள்பட மூன்று மாவட்டங்களிலும் 42 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், இதுவரை 9 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷவா்மா உணவகங்களில் நன்றாக வேக வைத்த பிறகு வாடிக்கையாளா்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். குழந்தைகள், முதியவா்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நன்றாக வேக வைத்த ஷவா்மா மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com