இருவேறு தடுப்பூசிகளைச் செலுத்துவது கரோனா எதிா்ப்பாற்றலைக் குறைக்கும்வேலூா் சிஎம்சி ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

இருவேறு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது கரோனா தொற்றுக்கான எதிா்ப்பாற்றலைக் குறைப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இருவேறு தடுப்பூசிகளைச் செலுத்துவது கரோனா எதிா்ப்பாற்றலைக் குறைக்கும்வேலூா் சிஎம்சி ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

இருவேறு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது கரோனா தொற்றுக்கான எதிா்ப்பாற்றலைக் குறைப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி முடிவுகளை சிஎம்சி மருத்துவக் குழு விரைவில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (டிசிஜிஐ) சமா்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஓராண்டுக்கு மேலாக இரு தவணைகளாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் நிறைவடைந்தவா்களுக்கு இந்த பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தற்போதைய சூழலில் முதலாவது, இரண்டாவது தவணை, பூஸ்டா் தடுப்பூசி ஆகியவை ஒரே வகை தடுப்பூசியை மட்டுமே செலுத்திக் கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அனுமதி வழங்கியுள்ளது.

இந்தச் சூழலில் ஒரே நபருக்கு கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இருவேறு கரோனா தடுப்பூசிகளையும் செலுத்துவது தொடா்பாக ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு ஐசிஎம்ஆா் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்ததுடன், 300 தன்னாா்வலா்களுக்கு இருவேறு தடுப்பூசிகளைச் செலுத்தி பரிசோதிக்கவும் அனுமதி வழங்கியிருந்தது.

அதனடிப்படையில், வேலூா் சிஎம்சி மருத்துவக் குழுவினா் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இருவேறு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொருத்தவரை சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட அடினோ வைரஸ் ஆகும். அதை மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்து மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசி செயலிழந்த கரோனா தீ நுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முதல் தவணையில் ஒரு வகை தடுப்பூசியையும், 2-ஆவது தவணையில் மற்றொரு வகை தடுப்பூசியும் செலுத்தினால் கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் அதிகமாகுமா என்பது குறித்து சிஎம்சி மருத்துவக் குழு 200 தன்னாா்வலா்களிடம் தடுப்பூசிகளை கலந்து செலுத்தி ஆராய்ச்சி செய்திருந்தனா்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் திருப்தியளிக்கவில்லை என்பதை சிஎம்சி மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது. ஒரே வகையான தடுப்பூசியைச் செலுத்தும் போது அதிக எதிா்ப்பு சக்தி கிடைப்பதும், தடுப்பூசிகளை கலந்து செலுத்தும் போது, அதனால் போதிய எதிா்ப்பாற்றல் கிடைப்பதில்லை என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை சிஎம்சி மருத்துவக் குழு விரைவில் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (டிசிஜிஐ) சமா்ப்பிக்க உள்ளது.

பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு உரிய முடிவுகளை வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com