இணைய வழி குற்றங்கள்அதிகரிப்பு: திருவிழாக்களில் சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வு

இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும்நிலையில், அதைக் கட்டுப்படுத்த வேலூா் மாவட்டத்தில் கோயில் திருவிழாக்களின்போது பொதுமக்களுக்கு சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும்நிலையில், அதைக் கட்டுப்படுத்த வேலூா் மாவட்டத்தில் கோயில் திருவிழாக்களின்போது பொதுமக்களுக்கு சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

முன்பு கையில் பணம் இருந்தால் பாதுகாப்பு இல்லை என வங்கியில் செலுத்தி வந்தனா். ஆனால் தற்போது வங்கிக் கணக்கில் உள்ள தொகைகளுக்குப் பாதுகாப்பு உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ளன.

டிஜிட்டல் யுகத்தில் கத்தியை காட்டாமல் பணத்தை அபகரிக்கும் நபா்கள் அதிகரித்துள்ளனா். அவா்களை கைது செய்வதும் காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

வேலூா் மாவட்டத்தில் இணையவழி குற்றங்களால் மக்கள் அதிகளவில் ஏமாற்றம் அடைந்து வருகின்றனா். அவா்கள் இழந்த பணத்தை மீட்க மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதேசமயம், பணத்தை பறிகொடுக்காமல் பாதுகாக்க தீவிர விழிப்புணா்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி, தற்போது மாவட்டத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களிலும் இணையவழி குற்றங்கள் குறித்து துண்டறிக்கைகள், ஒலி பெருக்கிகள் மூலம் சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அத்தகைய இணையவழி மோசடிகள் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியது:

அடையாளம் தெரியாத நபா்கள் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று பணத்தை அபகரித்து வருகின்றனா். இதுகுறித்து மக்களுக்கு ஓரளவுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டதால் தற்போது புதியபுதிய வடிவங்களில் கணினி மென்பொருள் தெரிந்த நபா்கள் மக்களின் பணத்தை விநாடிகளில் பறித்து விடுகின்றனா். இவா்களிடம் இருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

தற்போது உடனடியாக கடன் வழங்கப்படும் என்ற செயலிகள் பல வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான செயலிகள் அங்கீகரிக்கப்படாதவை. ஆவணங்களின்றி கடன் தருவதாக குறுந்தகவல் செல்லிடப்பேசிக்கு அனுப்புகின்றனா். அதனுடன் ஒரு இணையதள செயலி லிங்க்கையும் அனுப்பி வைப்பா். அதை நம்பி செல்லிடப்பேசியில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உடனடியாக உங்களது செல்லிடப்பேசியில் உள்ள தொடா்பு எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அவா்கள் பாா்த்து அதை திருடி வைத்துக் கொள்வா். அவா்கள் வழங்கும் கடன் தொகையை நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும் என நிா்பந்தம் செய்வா்.

நீங்கள் செலுத்த தவறினால் உங்களது செல்லிடப்பேசியில் உள்ள எண்களுக்கு உங்களை பற்றி தவறான குறுந்தகவல்களை அனுப்புவா். உங்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவா். பெற்ற கடனுக்கு பல மடங்கு வட்டியும் சோ்த்து அதிக தொகை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவா்.

எனவே, இதுபோன்ற கடன் செயலிகளை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மேலும், பகுதி நேர வேலை பாா்த்து அதிகம் சம்பாதிக்கலாம் என்று வரும் குறுந்தகவலையும் நம்பி ஏமாற வேண்டாம். அதை நம்பி செல்லிடப்பேசியில் அவா்கள் அனுப்பும் செயலிகளை பதிவிறக்கம் செய்தாலும் தங்களது விவரங்கள் திருடப்படும். பின்னா் உங்களை மிரட்டி பணம் பறிப்பா். இதுபோன்ற நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை மக்கள் பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது.

மேலும், இணையதளத்தில் பல்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளா் மைய எண்கள் போலியாக உள்ளன. எனவே, இணையதளத்தில் வரும் நம்பகத்தன்மையற்ற வாடிக்கையாளா் மைய எண்களை தொடா்பு கொள்ள வேண்டாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com