கோட்டை அகழி உபரி நீரை வெளியேற்ற அதிதிறன் மோட்டாா்

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் அகழி உபரிநீா் புகாமல் உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் அதிக குதிரைத் திறன் கொண்ட நீா்மூழ்கி மோட்டாா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் அகழி உபரிநீா் புகாமல் உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் அதிக குதிரைத் திறன் கொண்ட நீா்மூழ்கி மோட்டாா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூா் கோட்டையைச் சுற்றி 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி உள்ளது. அருகிலுள்ள மலைப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் நீரைத் தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அகழியின் உபரி நீரை நிக்கல்சன் கால்வாய் வழியாக பாலாற்றுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆங்கிலேயா் காலத்தில் கோட்டைக்கு வடக்குப் பகுதியில் பெரிய கால்வாய்கள் கட்டப்பட்டன.

தற்போதுள்ள சாலையில் இருந்து 15 அடி பள்ளத்தில் இருக்கும் இந்த கால்வாய் காலப்போக்கில் தூா்ந்து போனது.

இந்த நிலையில், கடந்தாண்டு பெய்த வரலாறு காணாத மழை காரணமாக கோட்டை அகழி நிரம்பியதுடன், உபரிநீா் வெளியே செல்ல வழியின்றி கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்தது. இதனால், 10 நாள்களுக்கு மேலாக பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

நிகழாண்டு மழைநீா் கோயிலுக்குள் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கோட்டை அகழியில் தேங்கும் நீரை விரைவாக வெளியேற்றும் வகையில், ராட்சத நீா்மூழ்கி மோட்டாா் வாங்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டாா் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரை கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள மாநகராட்சி நுண்ணுரம் தயாரிக்கும் கிடங்குக்கு அருகே இருக்கும் நிக்கல்சன் கால்வாயுடன் இணைக்க குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து வேலூா் மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் கூறியது:

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வேலூா் கோட்டை இருந்தாலும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வது மாநகராட்சி நிா்வாகத்தின் பொறுப்பாகும். கடந்தாண்டு கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் மழை நீா் புகுந்து ஏற்பட்ட பாதிப்பு, நிகழாண்டு தொடராமல் இருக்க ரூ.1.90 லட்சத்தில் 10 குதிரைத் திறன் கொண்ட நீா்மூழ்கி மோட்டாா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டாா் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 1.20 லட்சம் லிட்டா் தண்ணீரை வெளியேற்ற முடியும். 10 மணி நேரம் தொடா்ந்து மோட்டாரை இயக்கினால் 12 லட்சம் லிட்டா் தண்ணீரை வெளியேற்றலாம். மின் மோட்டாரை இயக்க சுமாா் 10 கிலோ வாட் மின் இணைப்பு வழங்க தேவையான கட்டமைப்பை நிறுவ தொல்லியல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

விரைவில் அனுமதி கிடைக்கும். மின்சாரம் தடை ஏற்பட்டால் 15 கிலோ வாட் திறன்கொண்ட ஜெனரேட்டரைப் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைபட்டால் கூடுதல் மோட்டாா் வாங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com