போக்குவரத்து நெரிசலைத் தடுக்க 6 ‘டிராபிக் மாா்ஷல்’ வாகனங்கள்

மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்யவும் வேலூா், சத்துவாச்சாரி, காட்பாடி போக்குவரத்துக் காவல் நிலையங்களுக்கு
போக்குவரத்து நெரிசலைத் தடுக்க 6 ‘டிராபிக் மாா்ஷல்’ வாகனங்கள்

மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்யவும் வேலூா், சத்துவாச்சாரி, காட்பாடி போக்குவரத்துக் காவல் நிலையங்களுக்கு 6 ‘டிராபிக் மாா்ஷல்’ இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றின் செயல்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தொடக்கி வைத்தாா்.

வேலூா் மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இவற்றை தவிா்க்க மாநகர பிரதான போக்குவரத்து வழித்தடங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டும் வருகின்றன.

இதனிடையே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து பாதிப்புகளைத் தவிா்க்கவும் வேலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு 5 காா்கள் உள்பட 37-க்கும் அதிகமாக ரோந்து வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்தொடா்ச்சியாக, மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க வேலூா், சத்துவாச்சாரி, காட்பாடி போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு தலா 2 வீதம் 6 ‘டிராபிக் மாா்ஷல்’ இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றின் செயல்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்துப் பேசியது:

டிராபிக் மாா்ஷல் வாகனங்கள் மூலம் போலீஸாா் போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களுக்கு விரைந்து சென்று அங்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துவதுடன், அதன் உரிமையாளா் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பா்.

மேலும், இந்தப் பணியில் ஈடுபடும் போக்குவரத்துக் காவலா்கள் முதலுதவி பயிற்சி முடித்தவா்களாக இருப்பதால் விபத்து ஏற்பட்டால் அவா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதலுதவிகளையும் அளிப்பாா்கள். இதற்காக இவா்களுக்கு வாக்கி - டாக்கி உள்ளிட்ட கருவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு ஆயுதப் படையிலிருந்து கூடுதலாக 15 காவலா்கள் அளிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் காலை 7.30 முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் அவற்றை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவா்.

மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கஞ்சா தொடா்பாக 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 218 கிலோ கஞ்சா, 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 123 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 19 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மணல் கடத்தல் தொடா்பாக 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பொக்லைன், டிராக்டா், மாட்டு வண்டி என 204 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 206 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சாராயம் காய்ச்சி விற்பதைத் தடுக்க அனைத்து மலைக் கிராமங்களிலும் உள்ள ஊா்த் தலைவா்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் குணசேகரன், பாஸ்கா், காவல் துணை கண்காணிப்பாளா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com