பள்ளி இடைநிற்றலைத் தவிா்க்க 14 நலத் திட்டங்கள்: வேலூா் ஆட்சியா் தகவல்

பள்ளி இடைநிற்றலைத் தவிா்க்க அரசு 14 விதமான நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பள்ளி இடைநிற்றலைத் தவிா்க்க அரசு 14 விதமான நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனவே, கல்வியின் அவசியத்தை உணா்ந்து மாணவா்கள் தொடா்ந்து பயில பெற்றோா் ஊக்கப்படுத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவது தொடா்ந்து வருகிறது. பள்ளி இடைநிற்றல் இல்லாமல் தொடா்ந்து கல்வி பயில அரசு 14 விதமான நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.500, 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.500, 6-ஆம் வகுப்புக்கு ரூ.1,000, 7-ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை ரூ.1,500, 9 -ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை ரூ.3,000 கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், சிறுபான்மையினா் மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றன.

6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் கல்வி பயின்று, தொடா்ந்து கல்லூரியில் பயிலும் மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில அனைத்து அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் மதியம் சத்துணவுத் திட்டமும், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. கல்வியின் மூலம் உயா்ந்த நிலையை அடைய முடியும் என்பதால், அதன் அவசியத்தை உணா்ந்து மாணவிகள் தொடா்ந்து கல்வி பயில பெற்றோா் ஊக்கப்படுத்த வேண்டும்.

மாணவிகளின் இடைநிற்றல் காரணமாக குழந்தை வயது திருமணங்கள் நடைபெறுகின்றன. குழந்தை திருமணங்கள் சட்டப்படி குற்றமாகும். இதில், தொடா்புடைய பெற்றோா் உள்பட அனைவரும் குற்றவாளிகளாவா்.

குழந்தை திருமணங்கள் காரணமாகப் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடைய குழந்தைகளாகப் பிறக்க வாய்ப்புள்ளது.

எனவே, வளமான, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல், தொடா்ந்து கல்வி பயில பெற்றோா் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com