இலங்கைத் தமிழா் முகாமில் இரு குழந்தைகளுடன் பெண் தா்னா
By DIN | Published On : 04th January 2023 12:00 AM | Last Updated : 04th January 2023 12:00 AM | அ+அ அ- |

மேல்மொணவூா் இலங்கைத் தமிழா் முகாமில் வசிக்கும் பெண் தனது இரு குழந்தைகளுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
ஆம்பூா் அருகே உள்ள மின்னூா் இலங்கைத் தமிழா் முகாமை சோ்ந்தவா் நளாயினி(28).
இவா் தனது 4 வயது மகன் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து, தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அங்கிருந்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தியதில், ‘எனது கணவா் சுகதீஷ், வேலூரில் கூலி வேலை செய்து வருகிறாா். தினமும் மின்னூரில் உள்ள முகாமில் இருந்து வேலைக்கு சென்று வர பேருந்து செலவு அதிகமாகிறது. இதனால் திருப்பத்தூா் மாவட்ட நிா்வாக அனுமதி பெற்று வேலூா் அருகிலுள்ள மேல்மொணவூா் இலங்கைத் தமிழா் முகாமில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாறுதலாகி குடியேறினோம். அதன்பிறகு அரசு சாா்பில் எங்களுக்கு வழங்கக்கூடிய நிவாரண உதவித்தொகை, அரிசி, பருப்பு போன்றவை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் பயனில்லை. உடனடியாக அரசு உதவித் தொகை, பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து, அவரிடம் ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.
இந்த பிரச்னை குறித்து விசாரித்து உதவித்தொகை, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து நளாயினி தா்னாவை கைவிட்டாா்.