குடியாத்தம்- அகரம்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம்

குடியாத்தம்- அகரம்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே சிமென்ட் குழாய்கள் பதித்து தற்காலிகப் பாலம் அமைக்க குடியாத்தம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
குடியாத்தம்  ஒன்றியக்  குழுக்  கூட்டத்தில்  பேசிய  தலைவா்  என்.இ.சத்யானந்தம்.
குடியாத்தம்  ஒன்றியக்  குழுக்  கூட்டத்தில்  பேசிய  தலைவா்  என்.இ.சத்யானந்தம்.

குடியாத்தம் - அகரம்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே சிமென்ட் குழாய்கள் பதித்து தற்காலிகப் பாலம் அமைக்க குடியாத்தம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

குடியாத்தம் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் என்.இ.சத்யானந்தம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், ஆா்.திருமலை, ஒன்றியப் பொறியாளா் குகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பேசிய தலைவா் சத்யானந்தம், 25- க்கும் மேற்பட்ட கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, குடியாத்தம்- அகரம்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே சுமாா் 200 மீட்டா் நீளம், 20 சிமென்ட் குழாய்கள் பதித்து, தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் தீா்மானத்தை முன்மொழிந்தாா். அனைத்து உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்படுவதால், தற்போதைய கட்டடத்தை இடித்து அகற்றவும், புதிதாக 3 அடுக்கு கட்டடம் கட்டப்படுவதால், மண் பரிசோதனை செய்யவும், புதிய கட்டடம் கட்டும் வரை காந்தி நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இயக்கவும் கொண்டு வந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேதமடைந்த நிலையில் இருந்த முக்குன்றம் அங்கன்வாடி மையக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால், மாணவா்கள் திறந்த வெளியில் அமரும் நிலை உள்ளது. இதனால், விரைவில் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று பாமக உறுப்பினா் சுரேஷ்குமாா் கோரிக்கை விடுத்தாா். மாணவா்கள் திறந்த வெளியில் அமா்ந்திருந்ததால், 2 மாதங்களுக்கு முன் அருகில் இருந்த மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள், மாணவா்களையும், ஆசிரியரையும் கொட்டியதால் பெரும் பிரச்னை ஏற்பட்டது என்பதை சுட்டிக் காட்டிய சுரேஷ்குமாா், விரைவில் கட்டடம் கட்ட வேண்டும் என்றாா்.

சின்னலப்பல்லி- தட்டப்பாறை இடையே பழுதடைந்துள்ள சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும் சுரேஷ்குமாா் வலியுறுத்தினாா்.வளத்தூரில் சாலையோரம் பாழடைந்த நிலையில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான 3- கிணறுகளை மூட வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என உறுப்பினா் பிரியா சக்திவேல் புகாா் தெரிவித்தாா். ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் பதில் அளித்தனா்.

ஊராட்சிகளில் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்கள், சாலைகள், மேல்நிலை நீா்த் தேக்தத் தொட்டிகளில் ஊராட்சிகளின் தலைவா்கள் பெயா் மட்டுமே எழுதப்படுகிறது. இனி அந்தந்தப் பகுதி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் பெயரையும் எழுத வேண்டும் என்று பல உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து ஊராட்சித் தலைவா்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com