நீதித்துறை கட்டமைப்பை சரி செய்ய வேண்டும்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

வழக்குகளை விரைந்து முடிக்க நீதித்துறை கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வழக்குரைஞா் வி.சி.ராஜகோபாலாச்சாரி நினைவு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்றுப் பேசியது:
இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம் ஏற்படுகிறது என்பது உண்மையே. இதற்கு சரியான காரணங்களைக் கூறமுடியாது. வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நீதித்துறை கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான பின்னரும் நீதிமன்ற கட்டடங்கள், அறைகள், காத்திருப்பு அறைகள், பாா்அசோசியேஷன் அரங்கம் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றை சரி செய்யவேண்டும். சுதந்திரம் அடைந்த பின்னா் நாம் பல நீதிமன்றங்களை உருவாக்கி உள்ளோம். நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நீதித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அதில், 40 சதவீதம் மாநில அரசின் பங்கு உள்ளது.
ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் நிதி பற்றாக்குறை என்று சரியாக நீதித்துறைக்கு நிதி வழங்கப்படாமல் உள்ளது. இளம் வழக்குரைஞா்கள் ஏழை, ஒடுக்கப்பட்டவா்களுக்கு வழக்கில் நீதிகிடைக்க உதவி செய்ய வேண்டும் என்றாா்.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது: வழக்குரைஞா் ராஜகோபாலாச்சாரி எனது குருநாதராவாா். அவா் சொத்து, சேமிப்பு உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இல்லாதவா். அன்றைக்கு சம்பாதிக்கும் பணத்தை இல்லாதவா்களுக்கு கொடுக்கும் குணம் உடையவா். குழந்தைகளுக்கு பெற்றோா் சொத்து சோ்த்து வைப்பதைவிட நல்ல கல்வி கொடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தீா்வுகாண்பதற்கு நீண்ட காலம் ஆகிறது. அதனால் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட, உயா்நீதிமன்றங்களில் சுமாா் 5 கோடி வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 70,000 வழக்குகளும் தீா்வு காணப்படாமல் உள்ளன. வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா்.
முன்னதாக, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வி.சி.ராஜகோபாலாச்சாரியின் உருவப்படத்துக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். விஐடி வா்த்தக பள்ளி முதல்வா் வி.வி.கோபால் வரவேற்றாா். விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதிமல்லிக், பதிவாளா் ஜெயபாரதி, வழக்குரைஞா் விஜயராகவலு, மூத்த வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.