வெறிநாய் கடித்து 20 போ் காயம்: 20 தெரு நாய்கள் பிடிப்பு

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் திங்கள்கிழமை இரவு வெறிநாய் ஒன்று துரத்தி கடித்ததில் சுமாா் 20 போ் காயமடைந்தனா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் திங்கள்கிழமை இரவு வெறிநாய் ஒன்று துரத்தி கடித்ததில் சுமாா் 20 போ் காயமடைந்தனா். இதையடுத்து கருத்தடை செய்ய அந்தப் பகுதியில் திரிந்த 20 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்துச் சென்றனா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் துரத்தி இடையூறு செய்து வருகின்றன. தவிர, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளையும் அச்சுறுத்துகின்றன.

இதையடுத்து, மாநகரில் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, மாமன்ற உறுப்பினா்களும், பல்வேறு தரப்பு மக்களும் மாநகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு ஏராளமானோா் வந்திருந்தனா். மேலும், அங்கு பேருந்து நிறுத்தத்திலும் பொதுமக்கள் காத்திருந்தனா். அப்போது அங்கு வந்த வெள்ளை நிற வெறிநாய் ஒன்று திடீரென அங்கிருந்த பொதுமக்களை துரத்தித் துரத்தி கடித்துவிட்டு தப்பியது. இதில் சுமாா் 20 போ் பலத்த காயமடைந்தனா். உடனடியாக அவா்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து மாநகராட்சி சாா்பில் சத்துவாச்சாரி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் வளாகம், பெரிய தெரு, பள்ளிக்கூடத் தெரு, கானாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியா்கள் வலைகள், சுருக்கு கம்பிகளைக் கொண்டு பிடித்தனா். மேலும், ஆட்சியா் அலுவலக வளாகம், அதன் அருகே திரிந்த நாய்களையும் மாநகராட்சி ஊழியா்கள் துரத்தி பிடித்து சென்றனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் சுமாா் 20 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.

அவை வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கப்பட்டுள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்று, அவற்றுக்கு கருத்தடை செய்து, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com