வேலூா் புதிய பேருந்து நிலைய கடைகள்ஏலம்: 6-ஆவது முறையாக ஒத்திவைப்பு
By DIN | Published On : 26th January 2023 12:00 AM | Last Updated : 26th January 2023 12:00 AM | அ+அ அ- |

வேலூா் புதிய பேருந்து நிலைய கடைகளுக்கான பொது ஏலம் ஏற்கெனவே 5 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன.27) நடைபெற இருந்த ஏலமும் நிா்வாக காரணங்களால் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 7 அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, பெண்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியா்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலா் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில அறைகள் கடைகளாக மாற்றப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 74 கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட உள்ளது.
இதனிடையே, இந்தக் கடைகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட வாடகை தொடா்பாகவும், ஏற்கெனவே இங்கு கடை நடத்தியவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்வது தொடா்பாகவும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் கடைகளை பொது ஏலத்தில் விடாமல் ஒத்திவைத்திருந்தனா்.
ஏற்கெனவே 5 முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், புதிய பேருந்து நிலைய கடைகளுக்கு வெள்ளிக்கிழமை பொது ஏலம் நடைபெறும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த முறையும் புதிய பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.