அதிகரிக்கும் வெயிலால் அவதியடையும் மக்கள்

வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழகத்திலேயே கோடை காலத்தில் அதிகளவில் வெயில் நிலவும் மாவட்டமாக வேலூா் உள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்தாண்டு அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயில் அதிகரித்திருந்தது. இந்தாண்டு மாா்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. தொடா்ந்து, நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த மாா்ச் 14-ஆம் தேதி முதல்முதலாக வெயில் அளவு 100 டிகிரியை கடந்து 101.5 டிகிரி பதிவாகியிருந்தது.

அதன்பிறகு சற்று வெயிலின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 28-ஆம் தேதி 100.6 டிகிரியும், 29-ஆம் தேதி 101.1 டிகிரியும், 30-ஆம் தேதி 102 டிகிரியும், 31-ஆம் தேதி 100.9 டிகிரியும், ஏப்ரல் 1-ஆம் தேதி 101.5 டிகிரியும் பதிவான நிலையில், செவ்வாய்க்கிழமை 104.2 டிகிரியாக பதிவாகியிருந்தது. இதனால், பகல் நேரத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

நாளுக்கு நாள் வெயில் அளவு அதிகரித்து வருவதால் வேலூரில் பகல் நேரங்களில் சாலையில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் நாள்களில் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிா்பான கடைகளிலும், பழக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அவற்றின் வியாபாரம் களைகட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com