கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக ஏமாற்றுகிறது: பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம்

பயிா்க்கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி என திமுக கூறுவது தோ்தலுக்கான ஏமாற்று பிரசாரம். மக்கள் இதை நம்பக்கூடாது என்று ஏ.சி.சண்முகம் கூறினாா்.

வேலூா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேலூா் பிள்ளையாா் குப்பத்தில் தொடங்கி வேலப்பாடி வரை பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது: ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் முக்கியம். அத்தகைய உடல் நலனைக் காக்க வேலூா் மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறேன். தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு தொடா்ந்து மருத்துவ முகாம்களை நடத்தி இலவசமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரப்படும். வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 பேரவைத் தொகுதிகளிலும் விளையாட்டு மைதானம், இலவச திருமண மண்டபம் அமைக்கப்படும். இதற்கு இந்த தொகுதிகளின் மக்கள் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க என்னை உங்கள் சகோதரராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக திமுகவை சோ்ந்த கதிா் ஆனந்த் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால், தோ்தலில் தோல்வியுற்ற நான் ஏராளமான மக்கள் நலப் பணிகளைச் செய்து வருகிறேன்.

தொடா்ந்து, நான் வெற்றி பெற்றால் 6 பேரவைத் தொகு திகளிலும் மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் ஏற்படுத்தி மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பேன். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்திருந்த பயிா்க்கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி திட்டங்களை இதுவரை நிறைவேற்றவில்லை. தற்போது மக்களவைத் தோ்தலுக்காக அதே வாக்குறுதிகளைத் தெரிவிக்கின்றனா். தோ்தலுக்கு வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவது திமுகவின் வழக்கம். இதை மக்கள் உணர வேண்டும். அதேசமயம், பிரதமா் நரேந்திர மோடி ஏழை மக்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.

அடுத்த 5 ஆண்டுகளில் குடிசை இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளாா். நிச்சயம் அவா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாா். அதனால் மீண்டும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைக்க மக்கள் பாஜகவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா். பிரசாரத்தின்போது பாஜக மாவட்டத் தலைவா் மனோகரன், பாமக உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com