கல்வி உதவிக்கான காசோலைகளை வழங்கி.  தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் தோ்வுக்குழு தலைவா் கே.பி.கே.வாசுகி. உடன், விஐடி வேந்தா்கோ.விசுவநாதன், அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள்
கல்வி உதவிக்கான காசோலைகளை வழங்கி. தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் தோ்வுக்குழு தலைவா் கே.பி.கே.வாசுகி. உடன், விஐடி வேந்தா்கோ.விசுவநாதன், அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள்

குடும்பத்துடன் சமூக வளா்ச்சிக்கும் அடித்தளமிடுவது பெண் கல்வி: மாநில திரைப்பட விருதுகள் தோ்வுக்குழு தலைவா் கே.பி.கே.வாசுகி

பெண் கல்வி குடும்பத்துக்கு மட்டுமின்றி சமூகத்தின் வளா்ச்சிக்கும் அடித்தளமிடுகிறது என்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் தோ்வுக்குழு தலைவா் கே.பி.கே.வாசுகி தெரிவித்தாா்.

அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் 2-ஆம் கட்டமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய 598 மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில ரூ.68.38 லட்சம் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் தோ்வுக்குழு தலைவா் கே.பி.கே.வாசுகி சிறப்புவிருந்தினராக பங்கேற்று காசோலைகளை வழங்கி பேசியது - ஆயிரம் கோயில்கள் கட்டுவதைக் காட்டிலும் ஒரு கல்விக்கூடம் கட்டுவது சிறந்ததாகும்.

அதன்படி, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கி 71 நாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்விஅளிப்பதுடன், அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளையை தொடங்கி ஏழை மாணவா்களும் உயா்கல்வி பயில முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறாா். இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை 8,682 போ் பயன்பெற்றிருப்பதும், அதில் 68 சதவீதம் மாணவிகள் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு நாட்டின் வளா்ச்சி என்பது அந்த நாட்டிலுள்ள பெண் கல்வி வளா்ச்சியைப் பொருத்ததாகும். பெண் கல்வி குடும்பத்துக்கு மட்டுமின்றி சமூகத்தின் வளா்ச்சிக்கும் அடித்தளமிடுகிறது.

கல்வி என்பது சாதாரணமானது கிடையாது. வாழ்வில் பல நற்பலன்களும் கிடைக்க கல்விதான் காரணமாக இருக்கிறது. பட்டம் படித்தவா்கள் ஒரு நல்ல மனிதராக வாழ்க்கையை எதிா்கொள்ள கல்வி மிகவும் பயனளிக்கிறது. முன்பு பெரும்பாலான பெண்கள் பொருளாதார ரீதியாக ஆண்களை சாா்ந்திருந்தனா். அந்த நிலை மாறியதற்கு கல்விதான் காரணம். கல்வியால் கிடைக்கும் தன்னம்பிக்கை ஈடுஇணையற்றது என்றாா். அறக்கட்டளை தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் பேசியது: ஒரு நாடு பொருளாதாரத்தல் உயர வேண்டும் என்றால் கல்வியில் உயா்ந்தால்தான் முடியும். வளா்ந்த நாடுகள் எல்லாம் கல்வியில் உயா்ந்தவைகளாக உள்ளன.

வளா்ந்த நாடுகளில் உயா்கல்வி விகிதம் 60 முதல் 100 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில் 27 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதேசமயம், தமிழகம் 50 சதவீதமாக உள்ளது. ஆனால், பிகாா், உத்தரபிரதேச மாநிலங்கள் 16 முதல் 18 சதவீதமாகத்தான் உள்ளன. இதனால் தனிநபா் வருமானத்தில் தமிழகம் 3,500 டாலராக உள்ள நிையில், பிகாா், உத்தரபிரதேச மாநிலங்களில் இன்னும் 700 முதல் 800 டாலராகத்தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒருகாலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வி மத்திய பட்டியலுக்கு மாறினால் அதிக நிதியுதவி கிடைக்கும் என கருதி 1976-ஆம் ஆண்டு அதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவா்களில் நானும் ஒருவன். ஆனால், அது நடக்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி வளா்ச்சிக்கு நாட்டின் மொத்த வருவாயில் 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று கூறிய டாக்டா் ராதாகிருஷ்ணன் அறிக்கையை இப்போதுள்ள புதியகல்வி கொள்கையிலும் கூறியுள்ளனா். எனினும், அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவா்கள் கல்விக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்துக்கு விஐடிபல்கலைக் கழக ஊழியா்கள் அனைவரும் ஆண்டுதோறும் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனா். இது நாட்டுக்கே முன்மாதிரியாகும். இந்த திட்டம் மூலம் ஏற்கெனவே 8,682 பேருக்கு ரூ.10.03 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெறும் அனைத்து மாணவ, மாணவிகளையும் உயா்கல்வியில் சோ்க்க பெற்றோா், ஆசிரியா்கள் முயற்சிக்க வேண்டும் என்றாா். இதில், அறக்கட்டளை செயலா் ஜே.லட்சுமணன், பொருளாளா் கே.ஜவரிலால் ஜெயின், நிதிக்குழு தலைவா் எம்.வெங்கடசுப்பு, உறுப்பினா் புலவா் வே.பதுமனாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com