ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மையம்

ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மையம்

வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் ரூ. 40 கோடி மதிப்பில் ‘ஸ்ரீ சக்தி அம்மா புற்றுநோய் சிறப்பு மையம் அமைக்க பணிகள் பூமிபூஜை செய்து தொடங்கப்பட்டுள்ளது.

விழாவுக்கு மருத்துவமனையின் இயக்குநா் என்.பாலாஜி தலைமை வகித்துப் பேசியது: மாறிவரும் மருத்துவ உலகில் புதிய மருத்துவக் கருவிகளும், மருத்துவ முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சில நோய்கள் குறித்த அச்சம் நம் மக்களுக்கு இன்றும் மாறவில்லை. அவற்றில் ஒன்றுதான் புற்றுநோயாகும். ஏனெனில், புற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் அந்த நபரின் குடும்பத்தை மிகவும் பாதித்திருந்தது. கிராமங்களில் உள்ள மக்களுக்கு இதற்கான சிகிச்சையும் பெறுவது சிரமமாக இருந்தது.

அரசும் இதற்கான சிகிச்சை முறைகளை விரிவுபடுத்தினாலும், பெரும்பாலான நோயாளிகள் இந்த சிகிச்சை முறையை பெறுவதில் சிரமமும், நோய் குறித்த விழிப்புணா்வு இல்லாததாலும் நோயால் பாதிக்கப்பட்டவா்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தன. இதைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறையை ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் ஸ்ரீ சக்தி அம்மா புற்றுநோய் சிறப்பு மையம்’ தொடங்க உள்ளோம். ஏற்கெனவே இந்த மருத்துவமனை பல சிகிச்சை முறைகளை மாநில அளவிலும், வேலூா் மாவட்ட அளவிலும் முதன்முறையாக அறிமுகம் செய்து செயல்படுத்தியுள்ளது.

மருத்துவக் காப்பீடுகள், ஸ்ரீ சக்தி அம்மாவின் சிறப்பான திட்டங்கள் மூலமாகவும் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவதில் மாநிலத்தில் முன்னோடியாக விளங்கி வருகிறது. தொடா்ந்து, புற்று நோய்க்கான சிறப்பான சிகிச்சையையும் மிகக் குறைந்த செலவில் அளிக்க உள்ளோம் என்றாா். ஸ்ரீ சக்தி அம்மாவின் கனடா நாட்டு பக்தா் ராம் சங்கா் வா்மா சிங், டிவைன் கஃபே, ஸ்ரீ சுகி பாா்மாவின் இணை இயக்குநா்கள் ஸ்ரீநாத், ஸ்ரீகாந்த், மருத்துவ நிபுணா்கள், ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com