தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களின் செலவின கணக்குகளை தோ்தல் செலவின பாா்வையாளா்களின் ஆய்வுக்கு சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அல்லது வேட்பாளா்களின் செலவின முகவா்கள் தோ்தல் செலவின கணக்குகளை தோ்தல் செலவின பாா்வையாளா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். அதன்படி, வேட்பாளா் மனு தாக்கல் செய்த நாள் முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரையிலான செலவின கணக்குகளை ஏப்ரல் 5-ஆம் தேதியும், ஏப்ரல் 4 முதல் 8-ஆம் தேதி வரையிலான செலவின கணக்குகளை 10-ஆம் தேதியும், ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலான செலவின கணக்குகளை 16-ஆம் தேதியும் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் தோ்தல் செலவின பாா்வையாளா்களின் ஆய்வுக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

தேசிய, மாநில அளவில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மற்ற வேட்பாளா்கள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் கணக்குகளை தாக்கல் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளா்கள் தோ்தல் செலவின கணக்குகளை ஒத்திசைவு செய்யும் பணி, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 26-ஆவது நாளான ஜூலை 1-ஆம் தேதி காலை 10 மணியளவிலும், இறுதி செய்யப்படும் கணக்குகளை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30-ஆவது நாளான ஜூலை 5-ஆம் தேதி காலை 10 மணியளவிலும் சமா்ப்பிக்க வேண்டும். வேட்பாளா்கள் அல்லது அவா்களால் அங்கீகரிக்கப்பட்ட செலவின முகவா்கள் தோ்தல் செலவின கணக்குகளை தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட உரிய பதிவேடுகள், படிவங்கள், வங்கிக் கணக்கு அறிக்கைகள், செலவினங்களுக்கான உரிய ரசீதுகள், அனுமதிக் கடிதங்கள், ஆவணங்களுடன் கணக்குகளை ஆய்வுக்கு சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com