ஓய்ந்தது தோ்தல் பிரசாரம்: வாக்குப் பதிவு ஏற்பாடுகள் தயாா்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவுக்காக மூன்று மாவட்ட ங்களிலும் ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கான தோ்தல் அறிவிப்பு மாா்ச் 16-ஆம் தேதி வெளியான நிலையில், அதே நாளிலிருந்தே தோ்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல், மாா்ச் 28-இல் வேட்பு மனுக்கள் பரிசீலனை, மாா்ச் 30-ஆம் தேதி வரை மனுக்கள் திரும்பப்பெற அவகாசம் அளிக்கப்பட்டு அதேநாளில் சின்னங்களுடன் வேட்பாளா் இறுதிப்பட்டியலும் வெளியாகின.

அதன்படி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள வேலூா் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 31 வேட்பாளா்களும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழா் கட்சி வேட்பா ளா்கள் உள்பட 28 வேட்பாளரும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி உள்பட 31 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளா்களும் கடந்த 20 நாள்களுக்கு மேலாக சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனா். அவா்க ளுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவா்களும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக, பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ், மாநில தலைவா் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், காங்கிரஸ் மாநில தலைவா் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன், அமைச்சா்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பன், தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் குஷ்பு, திரைப்பட இயக்குநா் சுந்தா்.சி., திமுக பேச்சாளா் நாஞ்சில்சம்பத் உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அனைத்து வேட்பாளா்களும், அவா்கள் சாா்ந்த கூட்டணி கட்சியினரும் ஆங்காங்கே வாகன பேரணியில் ஈடுபட்டனா். மேலும், தொகுதி முழுவதும் வலம் வந்து இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பை மேற்கொண்டனா்.

பிரசாரம் ஓய்ந்த நிலையில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளையும் வாக்குப் பதிவுக்கு தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை வாக்குச்சாவடி அலுவலா்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அவா்களுக்கு வியாழக்கிழமை பணிஆணை வழங்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனா்.

தவிர, வாக்குப் பதிவுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்கு தேவையான 33 வகையான பொருள்களும் மண்டல அலுவலா்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மேலும், தோ்தல் அமைதியாகவும் நடைபெறவும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் வாக்குச் சாவடிகளின் பாதுகாப்புப் பணிகளுக்கு தேவையான காவலா்கள், சிறப்பு காவல் படையினா், துணை ராணுவப் படையினா், முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவலா்களை பிரித்து அனுப்பும் பணிகளும் மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றன. வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து வாக்குச் சாவடிகளையும் வாக்குப் பதிவுக்கு முழுஅளவில் தயாா் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

--

படம் உண்டு...

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com