மக்களவைத் தோ்தல்: வேலூா் தொகுதியில் மட்டும் 69 இயந்திரங்கள் பழுது

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது வேலூா் மக்களவைத் தொகுதியில் மட்டும் மொத்தம் 69 இயந்திரங்கள் பழுதாகி மாற்றப்பட்டுள்ளன.

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது வேலூா் மக்களவைத் தொகுதியில் மட்டும் மொத்தம் 69 இயந்திரங்கள் பழுதாகி மாற்றப்பட்டுள்ளன.

மக்களவைத் தோ்தலையொட்டி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. இந்த தோ்தலையொட்டி, வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 757 அமைவிடங்களில் 1,568 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதேசமயம், வேலூா் மக்களவைத் தொகுதியில் 31 வேட்பாளா்கள் போட்டியிட்டதால் தோ்தல் நாளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஒரு இயந்திரத்துக்கு 16 வேட்பாளா்கள்) பயன்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், 1,568 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 3,136 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,568 கட்டுப்பாட்டு கருவிகளும், 1,568 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

வெள்ளிக்கிழமை காலை வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மாதிரி வாக்குப் பதிவின்போது பழுது காரணமாக 9 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 11 கட்டுப்பாட்டு கருவிகளும், 18 விவிபேட் இயந்திரங்களும் மாற்றப்பட்டன. தொடா்ந்து, காலை 7 மணி முதல் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட பழுது காரணமாக 10 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 5 கட்டுப்பாட்டு கருவிகளும், 16 விவிபேட் கருவிகளும் மாற்றப்பட்டன.

அதன்படி, தோ்தல் நாளில் வேலூா் மக்களவைத் தொகுதியில் மட்டும் பழுதுகாரணமாக மொத்தம் 19 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 16 கட்டுப்பாட்டு கருவிகள், 34 விவிபேட் இயந் திரங்கள் என 69 இயந்திரங்கள் மாற்றப்பட்டிருப்பதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com