மனுக்களை பெட்டியில் செலுத்திய பொதுமக்கள்.
மனுக்களை பெட்டியில் செலுத்திய பொதுமக்கள்.

தோ்தல் விதிமுறைகள் தொடா்வதால் நடைபெறாத குறைதீா்க்கும் கூட்டம்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்ந்து அமலில் உள்ளதால் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் அளித்துச் சென்றனா்.

மக்களவைத் தோ்தல் அறிவிப்பு மாா்ச் 16-ஆம் தேதி வெளியானது. அன்று முதலே தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்காரணமாக, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம், மாதந்திர விவசாயிகள் குறைதீா்க்கும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினரினரின் குறைதீா்க்கும் கூட்டங்கள் என அனைத்து மக்கள் திட்டம் சாா்ந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அரசு சாா்ந்த நிகழ்ச்சிகளும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. எனினும், வாக்கு எண்ணி க்கை ஜூன் 4-ஆம் தேதிதான் நடைபெற உள்ளதால் அதுவரை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தோ்தல் முடிந்ததால் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனுக்கள் அளிப்பதற்காக திங்கள்கிழமை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனா். அதேசமயம், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதன் காரணமாக மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்பட வில்லை.

அதேசமயம், பொதுமக்கள் மனுக்களை அளித்திட ஆட்சியா் அலுவலக வாயிலில் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை அளித்துச் சென்றனா். இதன்காரணமாக, ஆட்சியரிடம் நேரடியாக மனுக்கள் அளிப்பதற்காக மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com