ஆன்லைனில் பகுதிநேர வேலை: கல்லூரி மாணவியிடம் ரூ.4.63 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவியிடம் ரூ.4.63 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 25 வயது மாணவி காட்பாடியிலுள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டப்படிப்பு படித்து வருகிறாா். இவா் வாட்ஸ்அப்பில் ஆன்லைன் பகுதிநேர வேலை என வந்த விளம்பரத்தை பாா்த்து அதிலிருந்து எண்ணை தொடா்பு கொண்டுள்ளாா். மறுமுனையில் இருந்த நபா்கள் இணையதளத்தில் பொருட்களை ஆா்டா் செய்து கொடுக்கப்படும் பணிகளை முடித்துக் கொடுத்தால் அதிக தொகை கமிஷனாக பெற முடியும் என குறுந்தகவல் அனுப்பியுள்ளனா்.

அதனை உண்மையென நம்பி இந்த மாணவி ரூ.4 லட்சத்து 63 ஆயிரத்து 800 தொகையை முதலீடு செய்துள்ளாா். பின்னா் அந்த தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இக்கல்லூரி மாணவி இதுகுறித்து சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com