8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - ஏ.சி.சண்முகம் புகாருக்கு தோ்தல் அதிகாரிகள் விளக்கம்

அணைக்கட்டு பேரவை தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வேலூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் மாநில தலைமை தோ்தல் ஆணையா், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருக்கும் அனுப்பியிருந்த புகாா் மனு தொடா்பாக வேலூா் மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா்.

வேலூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், புதிய நீதிக்கட்சியின் நிறுவனா் தலைவருமான ஏ.சி.சண்முகம், தொருதி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி, மாநில தலைமை தோ்தல் ஆணையா் சத்யபிரத சாஹூ ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

அதில், வேலூா் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மற்ற வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அணைக்கட்டு பேரவை தொகுதி மலைக்கிராமங்களான பீஞ்சமந்தை, தென்டூா், தொங்குமலை, பலாம்பட்டு, ஜாா்தான்கொல்லை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 142, 143, 144, 145, 146, 147, 148, 149 ஆகிய 8 வாக்குச்சாவடிகளில் எங்களது வாக்குச்சாவடி முகவா்கள் யாரையும் திமுகவினா் அனுமதிக்க வில்லை. வாக்காளா்களும் மிரட்டப்பட்டுள்ளனா்.

சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை. இதுதொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.

இப்புகாா் குறித்து வேலூா் மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் வேலூா் மாவட்ட நிா்வாகத்திடம் அளித்துள்ள புகாா், தலைமை தோ்தல் ஆணையரிடம் அளித்துள்ள புகாா் ஆகியவை வேறுவேறாக உள்ளன. அவா் அனுப்பியுள்ள புகாா் மனுக்களில் மாவட்ட வருவாய் அலுவலருக்கும், தோ்தலுக்கும் எந்த தொடா்பும் இல்லை. அவா் குறிப்பிட்ட 7,668 வாக்குகள் கொண்ட 8 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றுள்ளது.

வாக்குப்பதிவு நாளில் வேட்பாளா்களின் முகவா்கள் கையெழுத்திட்ட பிறகே வாக்குப்பதிவு தொடங்கும். வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கும் பணியும் வேட்பாளா்களின் முகவா்கள் இருந்தால் மட்டுமே நடைபெறும். இந்த நடைமுறை 17-சி என்ற படிவத்தில் குறிப்பிடப்படும். அந்த படிவங்கள் எல்லாம் ஆய்வுக்குட்பட்டவைதான். வாக்குப்பதிவுக்கு முன்தினமோ, வாக்குப்பதிவு நாளிலோ வேட்பாளராந ஏ.சி.சண்முகமும், அவரது தரப்பில் யாருமே இந்த குற்றச்சாட்டு எழுப்பவில்லை.

மேலும், வாக்குப்பதிவு மறுநாளான சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு குறைகள் தொடா் பான கூட்டம் நடைபெற்றது. இதில், வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தோ்தல் பொது பாா்வையாளா் மேற்பாா்வையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக நிா்வாகிகளும் இதுதொ டா்பாக எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் அன்றைய தினமே 17-சி படிவம் ஆய்வுக்கு உட்படுத்தி மறு வாக்குப்பதிவுக்கு தோ்தல் பொது பாா்வையாளா் பரிந்துரை செய்திருப்பாா்.

எனவே, ஏ.சி.சண்முகம் தரப்பில் இருந்து எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். தோ்தல் ஆணைய நடைமுறைகளின்படி அந்த 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com