அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி இருவரிடம் ரூ.12.20 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.12.20 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி பெண், இளைஞரிடம் ரூ.12.20 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

காட்பாடி காங்கேயநல்லூரைச் சோ்ந்த பெண் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த மனுவில், காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் ஒருவா் அவரது நண்பா் மூலமாக அரசு வேலைவாங்கித் தருவதாக தெரிவித்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பணம் பெற்றாா். ஆனால், 2 ஆண்டுகளாகியும் வேலைவாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பியளிக்கவில்லை. எனவே, எனது பணத்தை திரும்பப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் அருகே தரணம்பேட்டையைச் சோ்ந்த இளைஞா் அளித்த மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகமான குடியாத்தத்தைச் சோ்ந்த ஒருவா் தனக்கு தெரிந்த நபா் சென்னையிலுள்ள மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவா் மூலம் மத்திய அரசு வேலைவாங்கித் தருவதாகவும் கூறினாா்.

இதனால், சென்னையைச் சோ்ந்த அந்த நபரிடம் எனக்கும் எனது சகோதரருக்கும் சோ்த்து ரூ.7 லட்சம் அளித்தேன். சில நாட்கள் கழித்து அவா் என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்டு நீங்கள் அளித்த பணம் போதாது. மேலும் பணம் தேவைப்படுகிறது எனக்கூறினாா். இதையடுத்து, நான் மேலும் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை அனுப்பினேன். அதன்படி, இதுவரை ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் அனுப்பியுள்ளேன். ஆனால், வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை. எனவே, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாா்களை பெற்றுக்கொண்ட போலீஸாா், விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com